அழகிய குட்டி சேட்டைகள் - 1
காகிதங்களில் நீ
கிறுக்கல்கள் செய்து
எழுத்துக்கள் என்று
சொல்லி நிற்கிறாய்
கோடுகளை வரைந்து
ஓவியங்கள் வரைந்ததாய்
சிரிக்கிறாய்
குட்டி நாற்காலியை
தள்ளத் தானே
மலையை அசைக்கும்
பாவனைகள் காட்டுகிறாய்
குட்டி அட்டை பெட்டி
ஒன்றினுள் அழகாய்
ஒளித்து வைக்கிறாய்
விளையாட்டு சாமான்களை
பின் அது காணாமல் போனதாய்
அதைவிட அழகாய்
கதை சொல்கிறாய்
படித்த மேதைபோல
தீவிரமாய் வாசிக்கும்
தோரணை கொண்டு
புத்தகத்தோடு அமர்ந்திருக்கிறாய்
குட்டி நாற்காலியில்
ஒரு ஊரில் ஒரு
காக்கா இருந்ததாக
ஆரம்பிக்கிறாய் உன்
உன் குட்டி கதையை
அது பறந்து போனதுமே
கதை முடிந்தததாய்
பெருமூச்சு விடுகிறாய்
பெருங்கதை சொன்னதாய்
வீட்டு சுவரின்
சந்தன நிறத்தை
ஒவ்வொரு நாளும்
வண்ணமயமாய் மாற்றி
கொண்டிருக்கிறது என்ன
சொல்லியும் கேட்காத
உன் குட்டி விரலின்
தொடர் கிறுக்கல்கள்
சுத்தம் செய்த
குப்பையை தட்டிவிட்டு
திரும்பி வருவதற்குள்
மீண்டும் குப்பையாகி
கிடக்கிறது வீடு
உன் கைவேலையில்
அற்ப விஷயங்களுக்கு
அடம் பிடிக்கிறாய்
ஆர்ப்பாட்டம் செய்கிறாய்
அழுது நடிக்கிறாய்
புரண்டு உருள்கிறாய்
உன் சேட்டைகள்
அடிக்கடி சோதிக்கிறது
என் பொறுமையை
சட்டென்று அடிதனை
தந்துவிடுகிறேன் நான்
ஆனாலும் ஓடிவந்து
என்னையே அணைக்கிறாய்
கரைந்து போகிறது
என் கோபங்கள்
உன்னை சேர்கிறது
என் முத்தங்கள்
அழகாய் சிரிக்கிறாய்
ஆர்பாட்டங்கள் செய்கிறாய்
உன்னை ரசிக்கிறேன்
ஒவ்வொரு நொடியும்
என் செல்ல குழந்தையே