நல்குரவே என் நல்லுறவு
செருப்பில்லா பாதம்
கரிக்கீல் தெருவி லெழுதும்
வறுமையின் வன்மம்
இதிகாசம்
பசியினால் வறட்சியோ
வேர்வையும் காணேன்
மெலிந்துப் போன
யாக்கையில்
உடலுள்ளே உப்பின்
அடர்த்தி கடலையும்
வென்றிடும் போலும்
நாவினிற் தாகம் தூக்கு
போடுது
கண்ணுலே கண்ணீரும்
கரைந்து தான் போகுதே
அடிசலைப் போல் அர
வணைத்த புனலும்
புண்ணாகி
ஊற்றுழி ஏனோ பின்
தொடரும் பின்பமானது
இடுக்கண்ணில் சிக்கி
மண்ணோடு மக்கி
போவேனோ
ஓட்டை உடை
தெம்பற்ற நடை
சரியில்லா எடை
தடைக்கு மேல் தடை
என பசிப்போடும் செருப்படை
தீம் தீம் மென
பளு தழுவிக் கொல்லு(ள்ளு)து
நழுவி தான் போகுது
நொடிக்கொருமுறை
ஊசலாடும் உசுரு
உங்கள் மகிழுந்து சாரளம்
வெளியே இசைப்போடும்
கைகளும் தொண்டையும்
பொழிதலும் பன்னுதலும்
மாறி மாறி ஓதுது
இசை போடும்
எந்தன் வயிராடும்
தீர்வை தேடும்
விடலைக்கு
சுடலை தான் வீதியோ
விந்தினால் வந்தேனோ கருமு
ட்டையால் பிறந்தேனோ
நாதியில்லை நினைத்தேன்
ஆனாலும் அநாதை அல்ல
நல்குரவே என் நல்லுறவு