மழையென்பது யாதென –சேயோன் யாழ்வேந்தன்
பச்சைப் பூத்துவாலையால்
நீ தலை துவட்டிக் கொண்டிருக்கும்
அழகைப் பார்த்தால்
சிரிப்புத்தான் வருகிறது,
உன் கூந்தல் மேகம்
சுமந்த நீரையெல்லாம்
போயும் போயும்
ஒரு பூத்துவாலைக்கா பொழிவது?
பார்ப்பவர்களையெல்லாம்
பார்வையாளர்களாக்கி
விழிகளால் நீ நடத்திய
வீதி நாடகங்களின்
கடைசிப் பார்வையாளனாய் வந்து
உன் காதல் நாடகத்தில்
ஒரு பாத்திரமாகிப்போனவன் நான்
ஓர விழிப்பார்வையால்
என்னருகே இருக்கும்
யாரையோ நீ
பார்த்துப் போகும்போது
சாரலடிப்பது போல்
சிலிர்த்துக் கொள்ளும்
சாதாரணன் நான்
உன் காதலர் சிலர் உளரேல்
அவர் பொருட்டுப் பெய்யும்
உன் காதல் மழையில்
நானும் கொஞ்சம்
நனைந்துவிட்டுப் போகிறேன்
நனையக் கூடாதென
நான் குடைபிடித்தால்
அது கோழைத்தனம்
நான் நனையக்கூடாதென்று
நீ இமைக்குடை சாய்ப்பது
நரித்தனம்
உன்னிடமான
காதலைச் சொல்வதற்கு
கடைசி முயற்சியாகத்தான்
உன்னிடம் நான்
காதலைச் சொல்கிறேன்
உன்னைவிட்டு நான் விலகமாட்டேனென்ற
உன் நம்பிக்கையின் அடித்தளத்தின் மேல்
உன் பிடிவாதம் என்னும் சிகரமும்
என் விடாமுயற்சி என்னும் சிகரத்தின்
அடித்தளத்தில்
நீ என்னைவிட்டு விலகிவிடுவாயோ என்ற
என் பயமும்
நிலைகொள்கின்றன
சொல்லாமல் சொல்வது
புரியவில்லை என்பதால்
சொல்கிறேன்
சொல்லாவது புரிகிறதா சொல்.
நான் உன்னை விரும்புவது
உன்னதமான அழகு
எனக்குக் கிடைக்கவேண்டும்
என்பதற்காக அல்ல
உன்னதமான அன்பு
உனக்குக் கிடைக்கவேண்டும்
என்பதற்காகவே.
ஒரு குடைக்குள்
நனையாமல்
உரசிச் செல்லும்
போலிக் காதலர்கள்
போலில்லாமல்.
வானமென்ற
ஒரு குடைக்குள்
நனைகின்ற
உண்மைக் காதலர்கள்
ஆவோம் நாம், வா.