மழையென்பது யாதென-ரகு
கோணிப்பை போர்த்தி
குச்சிக்கால் நனைய நடந்தக்
கூன் கிழவி
மழை பருகினாள்
முப்போகம் விளைந்த
ஞாபகக் கிளறலில்....!
-----------------------------------
குடிசையொழிகிய இடங்களில்
வைத்ததுபோக
மீந்துவிட்ட ஒற்றைப் பாத்திரத்தில்
ஒளிர்ந்திருந்தது
ஒருதுளி நம்பிக்கை....!
-----------------------------------
கால்கடுக்க
ஊதுபத்தி விற்றுத்திரிந்த
மனநலங்குன்றிய மனிதனுக்கு
ஓய்வளித்திருந்தது
வானொலிக் கூற்று
மெய்யெனப் பெய்த மழை....!
-----------------------------------
இளநீர்க் காய்களைத்
தார்பாயிட்டு மூடி உள்ளமர்ந்த
கணவனோடு மனம்விட்டுப் பேச வாய்த்த
மழையை
தன் வளையலற்றக் கையில்
ஏந்தி இன்புற்றாள் அந்த
ஏழைப் பெண் .......!
-----------------------------------
வழிசல் வாய்க்காலில்
குதூகலாமிடும் சிறார்கள்
பெய்யெனப் பெய்த மழை
விட்டபாடில்லை அவர்கள்
கொட்டத்தில் தானுங் கலந்து...........!
-----------------------------------
குடிசையோ கோபுரமோ
முழுக்க நனைத்தப் பின்னரும்
மரங்களில்
மிச்சம் வைத்திருந்தது மழை
தன் பெருவாழ்வை !
-----------------------------------
(குறிப்பு: தலைப்பு தந்து கவியெழுத அழைத்த நண்பர் தாகு அவர்களுக்கு நன்றிகள் பல !)
அன்புடன்
---சுஜய் ரகு ---