என்று உயிர் முளைக்கும்

இது மார்கழி மாதம் இல்லையே
இருந்தும்
நீ நடுக்கம் கொண்டது ஏனம்மா?

ஒரு காலத்தின் குளிருக்கு
நடுங்கிய மக்களுக்கு
கொடும் கோலத்தை கொடுக்க
நடுங்கிய உன்னால்
நடுங்கியதே உலகம் .

இந்த உலகில்
நடக்கக் கூடாதது
நடக்கப் போவதாக
கனவு கண்டு நடுங்கிவிட்ட
நிலத்தாயே..
நீ நடுங்கிய வேளை
அது நடந்துவிட்டதை
உணர்ந்தாயா..?

சிகரத்தின் பாரத்தை
சமம் செய்வதற்காய்
ஒரு நகரத்தின் ஓரத்தை
சமம் செய்த நிலமே
உன்பாரத்தை சமனாக்க
நெஞ்சின் ஈரத்தை மூடி
ஒரு கோரத்தைக்
கொடுத்தது நியாயமோ?

புல்லினம் பூபாளம் இசைத்து
புதுவிடியலை எதிர்பார்க்க
வல்லினமாய் நேபாளத்தில்
காரிருள் தந்துவிட்ட
நிலத்தாயே..
உன்னில் விதைகளை
விதைத்தவர்களை
நீ விதையாக்கிக் கொண்டாயே ..

விதைத்து அறுவடை செய்தவர்களை
சிதைத்து அறுவடை செய்த நிலமே
அன்று
உன்னில் விதை புதைத்தவர்கள்
பயிர் முளைக்க வைத்தார்கள்.
இன்று
உன்னால் விதையாய் புதைத்தவர்கள்
உயிராய் முளைப்பது என்று?

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (27-Apr-15, 2:34 am)
பார்வை : 85

மேலே