அதற்கப்புறம் என்ன ஆகும்
என் வயது
என்னவென்று
சொல்ல
விரும்பவில்லை.
தாத்தா
சூரியனைப்
பார்த்தார்.
என் அப்பா
அடுத்த தெரு
மசூதியின்
ஓதும் ஓசையையும்
கவனித்தார்.
நான்
பக்கத்துவீட்டில்
அடிக்கடி போய் பார்க்க
கூச்சப்பட்டு
கடன் வாங்கி
ஒன்று வாங்கினேன்.
என் மகன்
சாவி கொடுக்க
சிரமப்பட்டு
மின்கலத்தில் ஓடும்
ஒன்றை வாங்கினான்.
என் பெயரன்
செல்பேசி போதுமென
இதனை இன்று
பரிசு வழங்கவும்
அலங்காரத்திற்கும்
வாங்குகிறான்.
என் பெயரனின்
மகனுக்கு
போலியோ மருந்து,
தடுப்பூசி போல
ஒரு ஊசியை
போட்டுவிட்டார்கள்
நினைத்தால்
அப்போதைய நேரம்
துள்ளியமாக மூளையில்
பதியுமாம்.
--கனா காண்பவன்