ஒரு நிமிடம் ப்ளிஷ் நில்லுங்க

ஒரு மெல்லிய கோடு, கோட்டுக்கு இந்த பக்கம் இருந்தா நல்லவன்.. அந்த பக்கப் போய்டா கெட்டவன்'- இந்த வசனம் தமிழ் திரைப்படமொன்றில் வந்ததுதான் இருந்தாலும் அதற்குள் இருக்கும் அர்த்தங்கள் ஆயிரம்.

வாழ்க்கையில் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில் இருப்பதும் ஒரு மெல்லிய கோடுதான் அந்த கோட்டின் பெயர் தன்னம்பிக்கை.

தேர்தலில் தோற்றவர்களைவிட தேர்வில் தோற்றவர்கள் அதிகம் என்றாலும் தேர்வில் தோற்றவர்கள் உடனடியாக எடுக்கும் முடிவு தற்கொலை என்றால் அது உங்கள் வாழ்கையில் உங்களை தோற்கடித்துவிடும்.

நீங்கள் தேர்வில் தோல்வி அடைந்ததற்கும் அல்லது குறைந்த மதிப்பெண்கள் பெற்றதற்கும் பல காரணங்கள் இருக்கலாம்.

ஆனால் முக்கியமான விடயம் என்னவென்றால், இத்துடன் உங்கள் வாழ்க்கை முடிந்து போய்விடவில்லை என்பதுதான்.

இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் நீங்கள் அடுத்து என்ன செய்யவேண்டும் என்பது பற்றி முடிவெடுக்க உதவும் சில வழிமுறைகளை கீழே தருகின்றேன். முயற்சித்து பாருங்கள் உங்கள் முடிவுகள் மாறக்கூடும்.


1. மனம் விட்டு பேசுங்கள் - தோல்வி ஏற்பட்டதற்கான காரணங்கள் பற்றி உங்கள் ஆசிரியர், பெற்றோர் மற்றும் நண்பர்களுடன் பேசுவதால் மன இறுக்கம் குறைவதுடன், அடுத்து என்ன செய்வது என்பது பற்றி சில நல்ல ஆலோசனைகள் கிடைக்கும்.

2. உங்கள் முன் உள்ள அனைத்து வாய்ப்புகளையும் சிந்தித்துப் பாருங்கள் - மீண்டும் தேர்வு எழுதுவது, படிக்கும் முறையில் மாற்றம் செய்வது அல்லது துறையை மாற்றிக்கொள்வது ஆகியவற்றை பற்றி ஆலோசித்து முடிவெடுங்கள்.

3. உங்கள் பலம் என்ன என்று கண்டுபிடியுங்கள் - உங்களுக்கு பிடித்த, உங்களால் சிறப்பாக செயல்பட முடியும் என நீங்கள் நம்பும் துறை சார்ந்த படிப்புகளில் சேர்வது பற்றி சிந்தியுங்கள்.

4. வாய்ப்புகளை ஏற்றுக்கொள்ளுங்கள் - இந்த கல்லூரியில் தான் சேரவேண்டும் அல்லது இந்த துறையில் மட்டும் தான் சேர்வேன் என்று பிடிவாதத்துடன் இருக்காமல், கிடைக்கும் வாய்ப்புகளை சிறப்பாக எப்படி பயன்படுத்திக்கொள்வது என்பது பற்றி சிந்தியுங்கள்.

5. எல்லாம் கடந்து போகும் - அடுத்து செய்யவேண்டியது என்ன என்பது பற்றி சிந்திக்கும் அதே வேளையில், என்ன செய்தாலும் கடந்த காலத்தை மாற்ற முடியாது என்ற உண்மையை ஏற்றுக்கொண்டு, நடந்து முடிந்த கசப்பான விடயங்களை கடந்து செல்லுங்கள்.

6. சிறிது காலம் ஓய்வு எடுத்துக்கொண்டு, நேர்மறை எண்ணத்துடனும் புத்துணர்ச்சியுடனும் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறுங்கள்.

7. இந்த மாதிரியான நேரங்களில் உங்கள் முடிவுகளை தள்ளிபோடுங்கள். சில முடிவுகளில் தாமதம் சிறந்த பலன்களை தரும். மன உளைச்சளுடன் எடுகின்ற முடிவுகள் சிலவேளைகளின் மரணத்துக்கே வழிக்காட்டிவிடும்.

சிந்தித்து செயல்படுங்கள் வாழ்கை வளமாக அமையும். வாழ்த்துக்கள்...

(ஜோர்ஜ்)

எழுதியவர் : ஜார்ஜ் (7-May-15, 3:41 pm)
சேர்த்தது : ஜார்ஜ் தமிழா
பார்வை : 282

மேலே