விவசாயி
ஏர் பேனா கொண்டு
பூமித்தாளில்
எழுதவும்,
வாசிக்கவும்
வினைமிகு வினா நடவும்
நல் வித்து கண்டு விடை தரவும்
நெல் முத்து கொண்டு உணவிடவும்
இவர்களால் மட்டுமே இயலுமாகிறது
மண்ணை நம்புகிற மகான்கள்
பூமி கண்டெடுத்த புதையல்கள்
பூமியை புதையலாக்கும் புதல்வர்கள்
புனிதமிகு புருஷர்கள்-இந்த
விவசாயி என்னும் வீரியம்மிக்க
விதை நெல்கள் என்றால்
வேற்றுக் கருத்துண்டா
விளக்குங்கள்
சொல்லுங்கள் சோதரர்களே
“ஏசி”யையும்,”இன்டர்நெற்”றையும்
தவமாக எண்ணி
தர்க்கம் புரிபவர்களில்
எத்தனை பேர்
இயற்கைக்காய் கையேந்தி
இறைவனை இரஞ்சி இருக்குறீர்கள்?
உலகத்தில் மழைக்காக
மனுச் செய்பவர்கள்
விவசாயிகள் அன்றி
வேற்றாள் உண்டா
நகரம் மழையை ஏசி கரிக்கும்
கிராமம் மழையை பேசி சிரிக்கும்
நிழலை நிறுத்தவும்,பசியை துரத்தவும்
பயின்றிருக்கிறான்
பாட்டாளி என்கிற-விவசாய படைப்பாளி
அவர்களை
படிக்காத பாமரர் என்ற பாகு பாட்டில்
கருவறுக்க வேண்டாம் கை கொடுப்போம்
அவமதிக்க தூண்டா அரவணைப்போம்
ஒவ்வொரு உணவையும்
ஊணாக்கி உண்ணுகையில்
படைத்தவனுக்கு (இறைவனுக்கு)
நன்றி செலுத்தும் போது
பாட்டாளியையும் பந்திக்கு அழைப்போம்
ஒரு விவசாயின் வியர்வையை
நினைவால் பிசைந்து
நாமும்
பாட்டாளியின் கூட்டாளி என்று
கூட்டாக பசியாறுவோம்
விவசாயிக்கு நாங்கள்
விருது கொடுக்க வேண்டாம்
விரல் கொடுபோம் போதும்
களத்து,மேட்டில் அவன் படைப்புக்கு
அது நாம் விரித்த
செங் கம்பளமாய்
-அவன்
உள்ளத்தில் இருக்கும்
உயர் சம்பளமாய்
-தினம்
அவன் அருகில்
சந்தோசம் பெருக்கும்.
ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.
(தடாகம் கலை இலக்கிய வட்டம் நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதை போட்டி(மே 2015)மாதம்அறிவிப்பு...!ஏப்ரல் மாத கவிதை போட்டி முடிவுகளின் படி
இம்முறை போட்டியில் இக் கவிதை நான்காம் இடத்தில் தெரிவாகி பாராட்டை பெறுவதுடன் "தடாகத் தாமரைகள்" எனும் கவிதை தொகுதியில் இடம் பெறுகின்றது.)