இதுதான் அன்னை என்பதுவோ

...............................................................................................................................................................................................

அன்னையோ அடுக்களையில்
பிள்ளைகள் முன்னறையில்..
விருந்தென சூழும் சுற்றம்;
வீட்டிலே கும்மா ளங்கள்..

தொலைக்காட்சி பாட்டுச் சத்தம்,
தொலை தூர வேட்டுச் சத்தம்
சமையலறை எந்திரங்கள்
சடசடத்(து) ஓடும் சத்தம்..

கண்கள் முன் காய்கறி வேகும்
கருத்தோ முன்னறை போகும்..
செந்தணல் வருத்திட்டாலும்
சிற்றிதழ் புன்னகை வீசும்..

திடீரெனப் பாய்ந்தவள் மகனின்
தொண்டையில் விரல் விடுகின்றாள்;
பளீரெனும் நாணயம் எடுத்து
பாலனை அரவணைக் கின்றாள்...

தொக்கி விழும் நாணய சத்தம்
தொடர்ந்த தோர் பேரமைதி
எக்களிக்கும் ஓசை கேட்டு
ஈரெட்டில் வந்தேன் என்றாள்..

இவளுக்கும் இருசெவி, இருகை
இரைச்சலோ இரைச்சல் இரைச்சல்.....
மழலைக்கு அருகில் இருந்தும்..
மற்றவர் கேளா சப்தம்...

எப்படி அவள் கேட்டாளோ??
எப்படி அருள் செய்தாளோ??

இப்படி எத்தனை எப்படியோ?
இதுதான் அன்னை என்பதுவோ????

எழுதியவர் : அருணை ஜெயசீலி (10-May-15, 5:15 pm)
பார்வை : 120

மேலே