லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்

ஹஜ் ..
*********
இப்பெரும் புனித பயணத்திற்கு
அனுமதி நீர் தந்தீர்..இறைவா..
கண்ணீருடன் என் நன்றி கலந்தே
உள்ளம் உயரவே பறக்குது இங்கே..
லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்!
லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்!..
இதன் அர்த்தம் யாவுமே நான் புரிந்தேனா ..அன்றி
கண்டதை கேட்டதை சொல்கின்றேனா..
எனக்குத் தெரியவில்லை..இறைவா..
லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்!
லப்பைக் என்பது நான் இங்கு உள்ளேன் என்பதோ
யா ரப்பீ !
நீர் அழைக்கும் குரலுக்கு செவிமடுப்பேன்
பெரு நம்பிக்கையோடு நானே!
உமது பெரும் கருணையினால்
உமக்கே பணி செய்து கிடப்பேன் ..!
உயிர் உள்ள வரையிலும் நான்
உம்மைப் பணிந்து ..உம்மைச் சரணடைந்து
உயிர் வாழ்ந்து கடந்திடுவேன் ..இறைவா..
லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்!
லப்பைக் என்பது பூரண பக்தி ..
முழுமையாய் அல்லாவிடம்
ஒப்புக் கொடுப்பதும் பணிதலும் தானே..!
லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்!
லப்பைக் என்பது மனம் வருந்தியே
செய்த பாவங்களுக்கு அல்லா உம்மிடம்
நான் யாசிக்கும் மன்னிப்பு அன்றோ..!
பெரியவனே..நீ என்னை மன்னித்து ஏற்றுக்கொள்
என்றே உம்மிடம் பிச்சை கேட்பதன்றோ!
லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்!
லப்பைக் என்பது மாற்றம் வேண்டுவது
வாழ்வை உம்மிடம் அர்ப்பணிப்பது அன்றோ ..
..அது சொல்லிலும் எனது செயலிலும்
உம்மை மகிழ்ச்சி படுத்தல் அன்றோ!
தீய வழியினில் இருந்து விலகவும்
நேர் பாதையில் என்றும் செல்லவும்
உமது கரம் இன்று பிடித்தேன்..
உம்மை நெஞ்சில் இன்று ஏற்றேன் ..
லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்!
லப்பைக் என்று சொல்கையிலே ..
உம்மை நேசிக்கிறேன் என்பது தானே , யா ரப்பீ..
பாவம் நிறைந்த நான்
உன்னை தேடுவதும் ..
உன் புகழ் பாடுவதும் என்..
பாவம் கழியத்தானே..
எனது இன்பம் கூட உன்னோடு இருப்பதில் தானே !
லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்!
தலை குனிகிறேன்.. வெட்கப் படுகிறேன்..
நான் பாவம் செய்தவன் தானே ..
உமது அன்பை நாடியே
உமது மன்னிப்பை நாடியே ..
வந்ததிந்த பிள்ளை ..
கலங்கி வீழ்வதுன் காலடியில்..
லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்!
இனியேனும் நான் மாறுவேனா..
எனது வாழ்க்கை பாதையினை மாற்றுவேனா..
நல்லவற்றை இனியேனும் ..
நான் நேர்மையாகவே
காணும் தன்மை பெறுவேனா?
லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்!
தவறான வழியில் பொருள் புகழ்
நான் ஈட்டுவதும் ஒழிப்பேன்..
பொய்யுரைக்க மாட்டேன்..
பிறர் முதுகில் குத்தும் செயல்
என்றும் செய்யவும் மாட்டேன்..
கண்ணியமும், வேண்டுதலும் ,
நேர்மையும் தவற விட மாட்டேன்..
எனது பண்பினால் நிமிர்ந்து நிற்பேன்..
லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்!
நான் கொடுத்த வாக்குகள் நிறைவேற்றவும்..
எனது குறிகோள்களை நான் அடைவதற்கும்
யா..அல்லாஹ் ..துணையிருக்க வேண்டும்..
எனக்கு பலம் தரவும் வேண்டும் ..
லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்!
என்று நான் இறப்பேன்..
எங்கு நான் இறப்பேன்..
தெரியவில்லை ..யா அல்லா..!
இனிய இபுரஹீம் மீது கொண்ட அன்பினால்
இன்று சொல்லுகின்றேன்..
என்னை அழைக்கும் வேளையில்
லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்..
என்று மட்டும் நான் சொல்வேன்!
(பி.கு: என்னை பாதித்த முஸ்லிம் நண்பர் ஒருவரின் தூண்டுதலால் இந்த ஹஜ் பாடல் ஒன்றினை தழுவி எழுதியது இப்பாடல்..என்னையும் கவர்ந்ததால் எழுதி மகிழ்ந்தேன்)