யுகங்கள் தாண்டும் சிறகுகள் 32 கவித்தாசபாபதி

எந்நாளும் உன்பேர் சொன்னாலே போதும் என்வாழ்வு மிங்கே எழிலாகும்
---பொன்னாரம் பூண்ட மின்னாடும் மேனி என்வாழ்வைச் சேர்ந்த எழிலாகும்
செந்தாழம் பூவைக் கண்டாடும் கொங்கை கொண்டாளே தாயே உமையாளே
---உன்னாசி அன்றி வேறேது இங்கே என்பாவைக் காக்கும் ஒளியோசொல் !
சிந்தோடு சந்தம் வந்தாடும் வண்ணம் என்னோடு தாராய்த் தமிழாறை
---முன்னோர்கள் போற்ற முன்னேகி நானும் பொன்னான பாக்கள் பலபாடக்
கந்தோனின் கையில் அன்றோர்நாள் தாயே தந்தாயே வேலை அதுபோலே
---உன்சேயா மென்றன் கையோடு நீயும் தந்தாலே போதும் கவிவேலை !


எந்நாளும் செந்தாழம் சிந்தோடு கந்தோனின், பொன்னாரம் உன்னாசி முன்னோர்கள் உன்சேயா , எழிலாகும் எழிலாகும் உமையாளே ஒளியோசொல், தமிழாறை பலபாட அதுபோலே கவிவேலை -.சலசலசல சலசலசல சலசலசல சலசலவென, சங்கீதம் இசைத்து வரும் குறிஞ்சி ஓடையோ.....

சொன்னனாலே போதும் மின்னாடும் மேனி கண்டாடும் கொங்கை வேறேது இங்கே , வந்தாடும் வண்ணம் முன்னேகி நானும் அன்றோர்நாள் தாயே கையேடு நீயும் - சிலுசிலுசிலு சிலுசிலுசிலு சிலுசிலுசிலு சிலுசிலுவென , சொர்க்கம் சுமந்து வரும் பூவாடையோ......

வித்தகக்கவி விவேக்பாரதியின் உயிரோடையோ ...? இந்த “வண்ணப் பாடல்..!”

மரபென்னும் மேடையில் சந்தமும் சிந்தும் இறைவனைப் பாட எதுகையும் மோனையும் சலங்கை கட்டி ஆட....ஒரு கவிதை இங்கே நாட்டியமாகிறது இறைவனின் சந்நிதான மண்டபத்தில்.


சுற்றே அறியாமல் சுற்றுகின்ற பம்பரமாய்
சுற்றுவது நானே சுழற்சியவன் வெற்றென்(று)
இருந்த மனஇருளில் இன்பிறை சூடி
விரிந்த வானே சிவம்

மௌனமாய் பூக்கும் மலரிங்கு நானென்றால்
மௌனத்தின் மென்மலர்ச்சி' யாரோ - மௌனமொரு
மெல்லிய தெய்வசுரம் மனவீணைத் தந்திகளில்
துல்லியமாய்க் கேட்கும் சிவம்

துள்ளுகின்ற ஆசைத் தளிரால் சிலிர்ப்பவன்நான்
அள்ளும் "சிலிர்ப்பும்" அவனேகாண் - கள்ளமிலா
உள்ளமெனும் பொற்குளத்தில் உன்னதமாய்ப் பூக்குமொரு
வெள்ளைக் கமலம் சிவம்

கற்பனைகள் ஆடும் கவிமேடை நானென்றால்
சொற்களிலே பூக்கும் கவிஅவனே- பொற்பதங்கள்
என்னம் பலத்தினிலே என்றும் நடனமிடும்
பொன்னம் பலமே சிவம்

'ஏன்'என்ற கேள்வி'நான்' என்னுள்ளே சூல்கொண்டு
தேன்விடை தருவோனும் அவனே - வான்நிறம்
அடிமுடி அகிலம் அண்ட சராசரம்
உடையாய் தரித்தவன் சிவம் !

என்னுள் நுழைகின்ற நான்தானே 'நான்'என்றால்
என்னுள் இருக்கின்ற 'உள்'யாரோ ?- என்னுள்ளில்
பூவுமாய் தென்றலாய் தாயுமாய் தந்தையுமாய்
யாவுமாய் நிறைந்தவன் சிவம் ! (கவித்தா )

"பிறை சூடி வரும் வானம் " என்ற இந்த புதுக்கவிதை வாசம் கொண்ட வெண்பாக்கள் நான் எழுத விவேக் பாரதி , சியாமளா ராஜசேகர், கல்பனாபாரதி, காளியப்பன் எசேக்கியேல் , கவின் சாரலன் ஆகிய மரபின் மணிகள் தளை தட்டினாலும் களைக்கட்டும் பாக்கள் என போற்றி, அதற்கு பொன்னாரம் சூட்டியிருந்தனர். . பின்னொருநாளில் அந்தப் பிறை சூடனுக்கு அந்தாதி படைத்தார் விவேக் பாரதி. . பக்தி இலக்கியம் தழைத்தோங்கிய இடைப்பட்ட நூற்றாண்டுகளின் இறை கவியமுதை இந்நாளில் இச்சிறு வயதில் பல்வேறு சந்தங்களில் சிந்தும் இவரின் வித்தகத்தை தமிழ் வாழ்த்தும். இதோ சிவராத்திரியில் கங்கையென பாய்ந்த வித்தக கவியின் ஈசன் புகழந்தாதி....


கண்ட பொழுதிலே காரிருளை நீக்கிடுவாய்
அண்டத்தை ஆள்ஈசா ! ஆலாலம் - உண்டவனே
உந்தன் புகழ்பாட உன்னதமாய் வெண்பாவில்
சந்தக் கவிசெய்தேன் சற்று !

சற்றுன்னை எண்ணச் சகல வரங்கள்யான்
பெற்று உலகுசொலும் பேறடைய - நெற்றிவிழி
சேர்ந்த அழகுடனே ! சேயெனக்கு இன்பங்கள்
நேர்ந்திட வந்திடுவாய் நீ !

நீராடும் நெற்றியொடு நீள்சடையில் கங்கையும்
பேரோடு ஓடப் பிறைநிலவு - சீராகக்
கொண்டை மிசையில் குதித்து நடனமிட
வண்டார் உமைபாகா வா !

வாயுள் இனித்திடும் மாங்கனி யானவா
ஆயுள் நிறைய அருள்செய்வாய் - தாயுறவே
தந்தையும் ஆனவனே தங்கச் சடையோனே
சந்தமிகு செந்தமிழ்த்தேன் சிந்து !

சிந்து நிகர்த்த சிகையுடைய கங்கைநதி
முந்தி விசும்பிடை வந்துவிட - தந்தையே !
பொற்சடையில் கட்டிவைத்தாய் ! பொன்மலை யானேஎன்
கற்பனையில் வந்து கனி !

கனியால் நிகழ்த்தினாய் காலவிளை யாட்டை
நனியழகுப் பெற்றோரைப் பேணல் - இனிதென்றாய் !
காலாதி காலனே ! காற்படிந் திட்டேனே
ஏலாதி தாராய் எனக்கு !

எனக்கொரு ஊறென்றால் ஏழ்மலை தாண்டி
தினந்தொறும் நீவந் தருள்வாய் - தனமோடு
நல்லறமும் சேர்ந்திங்கே நல்கிடுவாய் ஈசனேநீ
தில்லை நடமிடும் தீ !

தீயொரு கண்கொண்டாய் தித்திக்கும் பல்சுவையில்
நீயொரு இன்சுவையாய் நிற்பாயே - வாயொருசொல்
சொன்னால் அதுமிங்கே சோதிப் பழம்பொருளே
உன்பேர் நமச்சிவாய மாம் !

மாம்பழம் தந்திட்ட மங்கைக்கு நீபிள்ளை
பூம்பொழில் பூத்த புதுவனத்தில் - காம்பேந்தும்
அல்லி மலரொத்தாள் அம்பிகையின் ஆண்டவனே
அல்லல் அறுத்தெனை ஆள் !

ஆள்கின்ற மன்னா அடிமை எனைஇங்கே
நீள்கரத்தால் தூக்கி நிறுத்துவாய் - நாள்பலவாய்
மேதினியில் வாழ்வோரும் மன்றாடும் வீடுபேற்றை
சோதியே எனக்குச் சொடுக்கு !

(சிவம் என்பது ஒரு நிலை (state) . ) அண்ட சராசரங்களை தன்னுள் அடக்கும் ஒரு குறியீடு . இதில் இறைமை , கவிதை, பக்தி இவற்றை தான் பார்க்கவேண்டுமே அன்றி மதங்களை உட் படுத்தி இக்கட்டுரையை புரிதல் கூடாது)

விவேக் பாரதியின் புலமை பல்வேறு திசைகளில் புரவியென பாய்கிறது. மரபுகளின் லாடம் பூட்டி,, புதுமையின் துள்ளல் காட்டி...!


மங்கைக்குக் கண்ணழகு ! துள்ளுகின்ற
மானுக்குப் பேரழகு வெள்ளைப்புள்ளி !
செங்கதிர்க்குப் பேரழகு ஒளிநெருப்பு !
சேய்மீன்கள் தானழகு பொய்கைத் தாய்க்கு !
சங்கிற்கு நிறமழகு ! தேய்ந்துபோகும்
சந்தனந்தான் மார்பிற்கு அழகு ! நல்ல
தங்கநகை கழுத்திற்கு அழகு ! என்றன்
தம்பிக்கோ தனியழகு குழந்தைப் பேச்சு ! (நா. காமராசன் )

மரபிலே புதுமையாய் பூத்த, புதியதில் மரபையும் சேர்த்த புதுக்கவிதையின் தேவன் நா. காமராசன் அழகு அழகு என்று அழகழகாய் அடுக்கிவைத்த புகழ் பெற்ற விருத்தத்தின் ஒரு கண்ணி இது. பின்னாளில் இந்த அழகே "கண்ணுக்கு மை அழகு, கவிதைக்கு பொய்யழகு " என்று திரையில் இனித்ததை அறிவோம்.. விவேக் பாரதியின் “அழகு” கட்டளைக் கலித்துறையில் ஆசை ஆசையாய் அணிவகுக்கிறது.

காற்றுக் கழகு நறுமணம் தன்னைக் கவர்ந்துவரல்
ஆற்றுக் கழகு விளைநில மேட்டினில் ஆடிவரல்
ஊற்றுக் கழகு எழிலுற மண்ணில் உருவெடுத்தல்
நேற்றுக் கழகு வரலா றினைத்தரும் நேர்த்தியதே 1

பணியிக் கழகு அறவழி தன்னில் பணம்வளர்த்தல்
மணியிக் கழகு கலகல வென்றே முழங்குதலே
துணியிக் கழகு உடுப்ப திரண்டெனும் தூமொழியில்
அணியிக் கழகு கவியை அழகாய் அமைத்தலிலே !

என்று நீண்ட அழகில் நீளும் அழகு......எனில் விவேக் பாரதிக்கு அழகு வெண்பாதான். அவர் கவி சொல்லும்போதும் , எழுதும்போதும் மட்டுமல்ல பேசும் பேச்செல்லாம், பகிரும் கருத்தெல்லாம் சீரிய வெண்பாக்களாய் பூக்கும் வித்தகம்.

வெண்பா எனும் கவி வடிவம் உலக கவிதை வடிவங்களில் முதன்மையான கட்டழகு கொண்ட கவியழகி. சரியான அணியும், இடையும், நயமும் , நளினமும் கொண்டு நடக்கும் வரை... வெறும் , எதுகை மோனை தளைகள் தட்டமால் உயிரில்லா பொம்மைகளை தென் பட்ட மேடைகளில், தளங்களில் எல்லாம் காட்சிக்கு வைப்பதால்தான் இந்தக் கவியழகி காணாமலே போய்க்கொண்டிருக்கிறாள். ..

விவேக் பாரதி போன்றோர்கள் ஆத்மார்த்தமாக வெண்பாவையும், மரபின் ஜீவனையும் நேசிப்பதும், தவமிருப்பதும், இவர் காலங்கள் போற்றும் கவிதைகளை காற்றில் கலப்பார் என்ற நம்பிக்கை எழுகிறது.

மரபில் ஊன்றி புதுக் கவிதைகளும் பின்னும் இவர் எந்த ஒரு புது வடிவத்தையும் போற்றும் குணம் சுவையானது. "ஹைக்கூ " பற்றி ஒரு வெண்பா எழுது என்று நண்பர்கள் கேட்க, உலக அரங்கில் பிரபலமாகிவரும் அந்த ஜப்பானியப் பெண்ணை அவர் பாடும் அழகு இளமையில் துள்ளுகிறது எப்படி பாருங்கள்.

சிந்தடியில் வந்தே சிரிக்கின்ற பேரழகி
சந்தங்கள் சிந்துவதில் சிந்துநதி - சொந்தஊர்
சப்பானாம் கேளீர்; பெயர்கேட்டால் ஹைக்கூவாம்
இப்போ(து) இவள்தான் கவி !

புதியவை போற்றும் பாங்கில்தான் இருப்பவை உயிர்த்து வாழும் என்ற சூட்சுமம் தெரிந்திருப்பதால்தான் அவர் வித்தகக் கவியாக தன்னை வியாபிக்க முடிகிறது.

நகைக்கடையில் எல்லா அணிகளையும் பூட்டிப்பார்க்க ஆசைப்படும் பெண்ணைப் போல கவிதையின் எல்லா வடிவங்களையும் வடித்துவிட துடிக்கும் இவர் மாறுபட்ட கருப்பொருளில், மாற்றுச் சிந்தனைகளில் சந்தங்கள் அமைத்தால் அவை இன்றை இனிவரும் தலைமுறைகளோடு இணைக்கும் கவிப்பாலம் ஆகலாம்.

நெல்லுக்(கு) இறைத்தநீர் வாய்க்கால் வழியோடி
புல்லுக்கு மாங்கே பொசியுமாம் - தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழை (.....)

என்று மிகச் சாதாரணமாக சொல்லப்பட்ட பழங்காலத்து வெண்பா நூற்றாண்டுகள் பல கடந்து மழை போல் பெய்கிறது இன்றும், என்றும். அத்தகு மழை தரும் கவிமேகங்கள் இவர் இள நெஞ்சில்..!

மரபுகள் என்றும் வாழும் ...மரபுக்குள் புதுமை இருந்தால் மட்டும்.
புதியதும் மரபில் ஊறும். ..இனி வரும் காலங்கள் இதை உணர்த்தும்.

(தொடரும் )

எழுதியவர் : கவித்தாசபாபதி (20-May-15, 7:44 pm)
பார்வை : 226

சிறந்த கட்டுரைகள்

மேலே