தந்தை
அழுது புரண்டு கிடப்பேன்
அள்ளி எடுத்து போவார்
வேண்டாம் வேண்டாம் என்பேன்
வேண்டும் என்றே விடுவார்
நரகம் போன்று தோன்றும்
நழுவி ஓட தூண்டும்
கோல் கொண்டு ஒருத்தி
குறுக்கும் மறுக்கும் நடப்பாள்
கோலம் ஒன்றை வரைந்து
இது என்ன என்று கேட்பாள்
திருதிருவென முழிப்பேன் அவளோ
அறுஅறுவென அறுப்பாள்
மணியோசை கேட்காதா
மணியோடி போகாதா
மனம் எல்லாம் தேடும்
கால் கிடந்து ஓடும்
மீண்டும் மாலை வருவார்
தோளில் ஏற்றி போவார்
வழிநெடுக்க கேட்பார்
"செல்ல குட்டிக்கு இன்னைக்கு
என்ன சொல்லி கொடுத்தாங்க"
அஆஇஈ சொல்லு
ஏபிசிடி சொல்லு
பாடல் ஏதும் பாடு அதற்குள்
வந்து விடும் வீடு
எகிறி குதித்து ஓட்டம்
அன்னை மீது நாட்டம்
எதிர்பட்டு வருவாள்
வா வா கண்ணா என
இனிப்பு ஏதும் தருவாள்
துரத்தி வந்த அப்பா
மீண்டும் கேட்பார் தப்பா
என்ன சொல்லி குடுத்தாங்க என்று
இனறு நினைக்க சிரிப்பு
உள்ளுக்குள் பூரிப்பு