அன்புத் தந்தைக்கு அன்புக் காணிக்கை

(அன்புத் தந்தைக்கு அன்புக் காணிக்கை
கந்தர் ஷ்ஷ்டிக் கவச மெட்டுப் பாடல்)

காப்பு

துதிப்பாடி மகிழ்ந்திடுவென்....
துயர்தன்னை தினம் தவிர்த்தே காத்திடவே வந்தருள்வாய் என்று
நிச்சயம் நம்பிடுவேன்....
திடமுடனே...அன்புத்தந்தை உன் மலர்த்தாள்
வணங்கி தினம் போற்றி வாழ்த்தி பணிந்திடுவேன்
வருவாய் ..... வந்தருள்வாய்....

பாடல்

தந்தையே உந்தன் தாள்மலர் பணிந்தேன்
தருணம் எம்மைக் காத்திட வருவாய்
தளரா மனம் கொண்டு செயல் புரிய அருள்வாய்
தமிழிசைப் பாடி உன் மலரடி பணிவேன்

பைந்தமிழ்ப் பாவால் நாளும் போற்றி
பாதமலர் தனை வேண்டிப் பணிவேன்
பாசம் மிகுந்த என் அன்புத் தந்தையே
பாங்காய் பணிந்தே பணிவுடன் போற்றுவேன்

வண்ணமலர்க் கொண்டு வணங்கித் துதிப்பேன்
எண்ணம் தனிலே ஆடிப் பாடி
திண்ணமாய் உந்தன் செயல் திறம் போற்றி
உண்மையாய் உருகிப் பாடிப் பணிவேன்

சகல நலங்கள் தந்தருள் தந்தையே
சந்ததம் தொழுதிடும் எங்களுக் கென்றும்
சர்வமுமாய் இருந்தே காத்தருள் புரிவீர்
சரணக் கமலம் பாடி மகிழ்வேன்

அனுதினம் எந்தன் அன்புத் தந்தையுன்
அருமை பெருமை போற்றிப் பரவி
ஆயிரமாயிரம் பாமலர் தொடுத்தே
அணையா விளக்கேற்றி அகம் மகிழ்ந்திடுவேன்

வந்தனைப் புரிந்தே வாழ்த்திப் பாடி
வழிபடும் உம்மகள் எம்மைக் காப்பாய்
வருக வருக என் அன்புத் தந்தையே
வாழ்த்துக்கள் கூறி வரமருள் புரிவாய்

வையகம் வானகம் ஈரேழ் உலகம்
எங்கும் எதிலும் நிறைந்தருள் புரியும்
கருணைக் கடலே காருண்ய மூர்த்தி
கருத்தினில் நிறைந்தே காத்தருள் புரிவாய்

இன்பத் தமிழில் இன்னிசைப் பாடி
இதமாய் பதமாய் இன்முகத்துடனே
இயற்றமிழ் பாடி இனிதாய்ப் போற்றி
இதயம் தனிலே மகிழ்ந்தே வாழ்த்துவேன்

செந்தமிழ்த் தேனால் உன்புகழ் போற்றி
செவிமடுத்திடவே இசைத்திடுவேன் நான்
செயல்கள் யாவிலும் வெற்றித் திகழ
செம்மையாய் வாழ்த்துவீர் என் அன்புத் தந்தையே

மெத்தவே உந்தன் புகழிசைத்திடுவேன்
மென்மை மலரால் மலர்ப்பதம் போற்றி
மேன்மை மிகுந்திடும் அன்புத் தந்தையே
மேதினியில் நான் உன்புகழ் இசைப்பேன்

சுந்தரத் தமிழால் சுவைபடப் பாடி
சுகந்த மணம் பரப்பி சுடரொளி ஏற்றி
சுகபோகம் நீக்கி சுத்த மனத்துடன்
சுற்றி வலம் வந்தே திருவடி தொழுவேன்

நறுமண மலரை நாளும் சூட்டி
நவிலும் பாடல் நயமுடன் ஏற்பாய்
நாளும் எம்மைக் காத்திட வருவாய்
நாதம் இசைத்தே நான் மகிழ்ந்திடுவேன்

சரணம்

வேதனைத் தீர்க்கும் கருணைக் கடலே
வேண்டி உன் மலரடி தினமும் போற்றி
வெற்றி நலன்கள் விரைவாய்ப் பெறுவேன்
வந்தனை கூறி வழிபடுவேன் நான்

பற்றினை அழித்து உன் பதமலர் நாடி
பணிவுடன் போற்றி பாங்காய்த் தொழுவேன்
ஜெய ஜெய என தினம் போற்றித் தொழுவேன்
ஜெயமே எதிலும் பெருவேன் திடமாய்......

சுபம்
அன்புடன் திருமதி ஜீ.எஸ். விஜயலக்ஷ்மி,
கோவை -22

எழுதியவர் : திருமதி ஸ்ரீ .விஜயலட்சுமி (24-May-15, 10:04 pm)
பார்வை : 157

மேலே