மண் ஊதி மண் தட்டி
ரூபாய்க்கு பத்து சொல்லி
பன்னிரெண்டாக
இலந்தை.. நாவல்பழங்களை
முந்தானைச் சீலையில்
துடைத்துக் கொடுக்கும் பாட்டிகளிடமும்...
வரப்பில் இறங்கி..
கடலைக் கொத்துக்கள் பிடுங்க...
தூரத்து மண்வெட்டி சகிதமாய்
ஆசைக்கு ரெண்டு கொத்துமட்டும்
என அனுமதித்திருந்த அண்ணன்களிடமும்....
இந்தப்பழம் இனிக்கும் எனக் கேட்டு
கல்லெறிந்து தோற்கையில்..
அலக்குகளில் செங்காய்ப் பத
புளியம்பழங்கள்
உலுக்கித் தரும் ஆட்டுக்காரத் தாத்தாவிடமும்...
இந்தமுறை கண்டிப்பாகச்
சொல்லிவிட வேண்டும்......ஹைஜீனிக்
காரணங்களுக்காய்
மொறுவல் பண்ட காகிதப்
பொட்டலங்கள் மட்டுமே பிள்ளைகளுக்குக்
கொடுக்கிறோம்..... என்பதை....
மாதம் ஒருமுறையாவது
வயிற்றுக் கோளாறுகளுக்காய் மருத்துவம்
பார்த்துக் கொள்கிறோம் என்று
நாங்கள்
சொல்லாமலேயே அவர்கள்
புரிந்து கொண்டிருக்கக் கூடும்.....