இன்றே நிஜம் -ரகு
பொய்த்துப் போகாதவாறு
கசியும் முந்தைய நாள்
நிலவொளி
இறுக்கி முடியப்பட்ட
சில்லறைக் காசுகளை
தளர்த்தியதாய்
பெருமூச்சிட்டு நழுவும்
உலகு
சின்ன முனகலுடன்
நூலிழை இடம் பெயரும்
நடுநிசி கடந்த பறவைகள்
ஆயிரமாயிரம் ஆண்டுகளாய்
அலைகள் தொடுக்கும் ஒரே கேள்வி
அப்பொழுதும்
மௌனம் யாதென
ராப்பிச்சை ஒருவனின்
நெடிய கொட்டாவியில் நகர்கிறது
அன்றைய நாள் மரணிக்க
எதன் உறுதிப்படுதலுமின்றி
கனவுகள் செதுக்கத்
தொடங்கியிருந்தன வழக்கம்போல்
சிற்சில சாதிப்புகளை
இருந்தும் அன்றதான
இருட்பிழிந்த பெருத்த நிசப்தமே
நிஜமென விழிகள் சார்த்துகின்றன
என் விழிப்பு சலனமின்றி!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
