எதிர்வரும் வழி - கே-எஸ்-கலை

வீடுவிட்டுக் காடுபோக வேண்டும் – அங்கே
விருந்துபல உண்டுமகிழ வேண்டும்
கூடுவிட்டு ஆவிப்போகும் முன்னே – நான்
கொள்ளையெழில் கண்டுமகிழ வேண்டும் !

கிண்ணத்து மதுவென்று மயக்கும் – சின்ன
வண்ணத்துப் பூச்சிகள் வேண்டும் !
வண்டோடும் விட்டிலோடும் கலந்து – நான்
கொண்டாடி மகிழ்ந்திருக்க வேண்டும் !

நதிதொட்டு வருகின்ற தென்றல் – என்
நலம்கேட்டுக் குளிர்விக்க வேண்டும்
வான்விட்டு வந்தந்த நிலவு – என்
வாலிபத்தை தீமூட்ட வேண்டும் !

தென்றல்தொட்டு நழுவுகின்ற தூறல் -என்
முன்றல்வந்து கோலம்போட வேண்டும்
செடிமுகத்தில் சிரிக்கின்ற பூக்கள் – சுக
சேதிகேட்டு வாய்மலர வேண்டும் !

சாரல்தரும் ஏழுநிறம் போதும் – செவ்
வானம்தரும் மேகமழை போதும்
ஆறுகடல் ஏரிஓடை போதும் – என்
ஐம்புலனும் பசியடக்கிப் போகும் !

மூலிகையாய் காதுக்குள்ளே ஏறும் - துளை
மூங்கில்வரும் கீதம்எனக்கு போதும்
பேரிடியாய் அடைமழையாய் பொழியும் -அந்த
பெருவெள்ள இசைவெல்லம் போதும் !

வான்கிடக்கும் முகில்போர்வை எடுத்து – நான்
வாஞ்சையோடு போர்த்திக்கொள்ள வேண்டும்
கூன்விழுந்து குறுகிப்போகும் முன்னே – நான்
தேன்நிலாவின் தேகம்தொட வேண்டும் !

மரத்தோப்பும் குருவிக் கூடும் பார்த்து – நல்
மணம்வீசும் மலர்களோடு பேசி
கரங்கோத்து காடுவழி போனால் – இந்த
கவிதையெல்லாம் போய்விடுமே நீத்து ?

மலையேறி வருகின்ற கதிரில் – கொஞ்சம்
மயக்கத்தை சில்லறைக்கு வாங்கி
தலையேறி இருக்கின்ற மயக்கம் – மெல்ல
தெளிவாக தெளிவாக வைப்பேன் !

யாக்கையெலாம் விடமேற்றிக் கொண்டு- வெறும்
நாக்கில் மட்டும் நாதமெதற்கு எனக்கு ?
காக்கையென்ன குயிலென்ன போடா – அக்
களங்கமில்லா சங்கீதம் போதும் !

நரகத்திலே வாழ்ந்துவிட்டேன் போதும் – நான்
நஞ்சு குடித்தும் மீண்டுவிட்டேன் போதும்
கிரகத்தில் தோஷமென்று சொல்லி – இந்தக்
கிணற்றிலிருந்து ஏறிவிட்டால் போதும் !

வளைவுநெளிவு கோடுகளைத் தைத்து - சிறு
வட்டங்களைத் தலையின்மேல் வைத்து
பித்துபிடித்து திரிந்தகாலம் போதும் – இனி
பித்தம்தெளிய இந்தவழிப் போவேன் !

எழுதியவர் : கே-எஸ்-கலை (6-Jun-15, 6:09 pm)
பார்வை : 267

மேலே