எழுதப்படாத என் கவிதை…

எழுதப்படாத என் கவிதையொன்று
விரல் வழியாக
எழுதுகோலின் முள் முனையில்
நாட்களையும்,
வேறான என் நினைவுகளையும்
தின்று கொண்டிருந்தது..

தும்பைச் செடிகள் தொலைந்து போன
இந் நிலத்தின்
வண்ணத்துப் பூச்சியொன்று
முள் முனையில் வழிந்தோட நிற்கும்
அக் கவிதையை உறிஞ்சிக் கொள்கிறது…

சொல்லப்படாத காதலுமாய்
வெளிப்படுத்தாத அன்புமாய் ஆகிப்போன
அக் கவிதை,
வண்ணத்துப் பூச்சியால்
உணவல்ல அதுஎன உறைக்கப்பட்ட
எந்தவொரு கணத்திலும்
வான் வெளியில் துப்பப்படலாம்…

எனினும் அது,
ஒரு வலியின் தீர்வாகவோ
ஒரு மகிழ்வின் சுவடாகவோ
வெறும் கவிதையாகவோ கூட
என் வெள்ளைத் தாள்களுக்கு வந்துவிடாது…!

எழுதியவர் : புதியகோடாங்கி (18-Jun-15, 10:27 am)
பார்வை : 135

மேலே