வேதியியலும் நிகழ்-வருங்காலமும் - போட்டிக் கவிதை

கத்தாழையும் கஸ்தூரி மஞ்சளும் போய்
க்ளீசரீனும் ஹைட்ராக்சி அமிலமும் கலந்த
முகப்பூச்சும் சாயமும் வந்தது
டும்டும் டும்டும்...!!

அரப்பும் சிகைக்காயும் போய்
சர்ஃபேக்டண்டும் சல்ஃபேட்டும் கலந்த
ஷாம்பூவும் கண்டிசனரும் வந்தது
டும்டும் டும்டும்...!!

ஆலங்குச்சியும் வேலங்குச்சியும் போய்
ஃபுளூரைடும் க்லைகாலும் கலந்த
பற்பசையும் திரவமும் வந்தது
டும்டும் டும்டும்...!!

ஜவ்வாதும் பன்னீரும் போய்
ஆல்கஹாலும் பென்சால்டிஹைடும் கலந்த
பெர்ஃபியூமும் டியோவும் வந்தது
டும்டும் டும்டும்...!!

பசுஞ்சாணமும் கோமியமும் போய்
'டிஈஈடி'(DEET) என்னும் வேதியியல் கலவை சேர்த்த
கரப்பான்கொல்லியும் கொசுவர்த்தியும் வந்தது
டும்டும் டும்டும்...!!

இளநீரும் பதநீரும் போய்
கோக்கைனும் கரியமில வாயுவும் கலந்த
கோக்கும் கோலாவும் வந்தது
டும்டும் டும்டும்...!!

இடியாப்பமும் தேங்காய்ப்பாலும் போய்
லெட்டும் க்லுடமேட்டும் கலந்த
நூடில்சும் சாசும் வந்தது
டும்டும் டும்டும்...!!

மருந்தடித்தால் பூச்சி செத்தது போய்
அசஃபேட் ஆர்செனிக் கலவையில்
இன்று சிறுகச் சிறுகச் நாம் சாகின்றோம்
டும்டும் டும்டும்...!!

நிலவேம்பும் மலைவேம்பும் போய்
சீக்கிரம் ஆற்றும் ஸ்டீராய்டு கலந்த
கேப்சூலும் சிரப்பும் வந்தது
டும்டும் டும்டும்...!!

இளங்காற்றும் ஆலங்கட்டி மழையும் போய்
கந்தகமும் கார்பன் மோனாக்சைடும் கலந்த
நச்சுக் காற்றும் அமில மழையும் வந்தது
டும்டும் டும்டும்...!!

இப்படியே போனால்,
உயிரும் உயிரும் கலந்து ஜனிக்கும்
ஊனும் உயிருமாகிய சிசுவிற்குப் பதில்,
ஈயமும் இரும்பும் சேர்ந்த கலவையில்
ஸ்பீடு: 1 டெராஹெர்ட்ஸ் ;மெமரி: 1 ஜிகாபைட்;
"சிட்டி" ரோபோக்களே உலவப் போகுது
டும்டும் டும்டும்.....!!!!!

எழுதியவர் : தப்தி செல்வராஜ், சாத்தூர் (18-Jun-15, 2:39 pm)
பார்வை : 769

மேலே