நீயும் நானும் யாரோ
நீயும் நானும் யாரோ
என் வீதியில் உந்தன் தேரோ
பெண்மையில் நீ தான்
உண்மையோ
உன் திண்மையால் எனை
வென்றாயோ
என் உள்ளெங்கும்
நீர்த்துளிக்குள்
தீ துளியாய்
நம் நினைவுகளின் புணர்ச்சியோ
இது புதுமையான புரட்சியோ
இரு முகிலாய் நாம் இருந்தோம்
ஒரு மேகமாய் திரண்டு வந்தோம்
காதலை பரிமாறினோம்
நான் நீயாகி
நீ நாமாகி தூரினோம்
உன் மழையின் விழியில்
நிலமாய் நனைந்தேன்
உந்தன் மொழியில்
ஒலியாய் கலந்தேன்
தூரல் நின்ற போதும்
உன் ஈரம் இன்னும் நீளும்
நீயும் இல்லா தூரம்
உன் நினைவு கூட்டிப் போகும்
இளவேனில் காணாத
பூஞ்சாரல் நீயோ
உன் இதழ்களின் தேரில்
புண்ணகை மீனோ
தூரிகைகள் தாங்காத
ஓவியம் நீயே
காரிகைகள் காணாத
பேருவகையே
என் நினைவுகளில்
உன் நிலவுதிக்கிறதே
என் இரவுகளில் வெயில்
நீள்கிறதே
என் கனவுகள்
உன் கரை சேர்கிறதே
எந்தன் குடைக்குள்
முன்பனி ஈரம்
எந்தன் சாலையில்
உன் பனிக்காலம்
எந்தன் வனமெங்கும்
தேனூறும் நேரம்
மணலில் விதையாய்
மனதில் நுழைந்தாய்
முதல் கவிதையாய் என்னுள்
நீயாகிப் போனாய்
என் பூக்களின் விதையே
என்னை கவியாக்கிய
இலக்கணம் நீயே
நீரை அள்ளிக் குடிக்கும்
இலையாய்
நுன் நினைவை குடிக்கும் நான்
தாகத்தால் அல்ல
தகிக்கும் உன் காதலால்
என் கடல் உன்னை
கேட்டது போல்
என் வயல் உன்னை
எதிர்பார்த்தது போல்
நீ காலச் சிறகுகள் வாங்கி
என் இளமைத் தவத்தின்
வரமானாய்
போரிட புறப்பட்ட
என் வாலிப புரவியை
வார் பிடித்து நீ
உன் விழிமுனை நிறுத்தினாய்
வழி மறுத்தாய்
என் மொழி பறித்தாய்
பாறையை கடத்திய
கடலாய் நீ
என்னை கடத்தி
உன்னுள் சேகரித்தாய்
நீயும் நானும்
அருகில் இருக்கும் போதும்
இருக்கும் இடைவெளியில்
காதல் தேவதைகள் நடனம்
நீயும் நானும்
அருகில் இல்லாத போது
இருக்கும் இடைவெளியில்
காதல் விதவைகள் விம்மும்
காதல் வனம் கூட்டிப் போய்
காடுகளில்
எனை தொலைத்தாயே
நீயும் நானும் இன்று
தீவுகளாய்
தாங்காமல்
நின்றுவிட்டது என் காலம் - ஆனால்
என் கடிகாரத்தில்
உன் நினைவு முட்கள் மட்டும்
சுற்றிக் கொண்டிருக்கிறது
நம் நேரங்களை காட்டியபடி