கடிதம்

அன்பினில் மடலினை அனுப்பிய நண்பரே
அகமெலாம் களித்துயான் எழுதுகிறேன் – நிதம்
இன்பினில் மிதந்திட்ட இனியதோர் நட்பினை
ஈட்டியதால் மனம் திளைத்திடுவேன் !
பா வலர் பாசறைப் பண்ணிடும் தண்ணிய
‘பா ‘வளர் பாறையை படைத்திடுவோய் ! பூங்
காவலர் ஆகிடும் வண்டென , கவியெனும்
‘கா ’வலம் வந்திடும் நற்றகையோய் !
நம்பியென் நட்பினை நாடிய தாலிதை
நம்பியே இக்கணம் தீட்டுகிறேன் – போற்
கம்பியாய் மின்னிட கவிதையில் மேம்பட
கவியினில் வினவினைக் காட்டுகிறேன் !
தலையென விலங்கினும் தலைக்கனம் அற்றநல்
தகைமையை நும்மடல் காட்டியது – பகை
இலையென கவிதைகள் இயற்றுவார் ! நும்கவி
இலையென பசுமையை நாட்டியது !
நானொரு அலுவரின் நாளொரு பேதையன்
நாளொரு முளைவிடும் ஒர்வித்து ! கவித்
தேனோடு ஓடியே திரிந்திடும் மனத்தினன்
தீந்தமிழ்ப் பற்றுயென் உயிர்சொத்து !
பல்கலை அறிகிலன் பாவியன் பாவினை
பரிகிடும் வேட்கையின் பிறப்பிடமாம் ! மனம்
செல்வழி சென்று நல் செந்தமிழ்க் கன்னியை
சிந்தையி லடைத்திடும் அரைகுடமாம் !
கட்டிய தேன்துளி , சிதறிய தோர்துகிர் ,
குதித்திடும் நீருறை போர் தவளை ! யானும்
கட்டிய மாலையில் தவறியே சேர்ந்ததால்
கவிஞனாய் பேருடை யோர் மழலை !
எப்படியோ பல ஏடுகள் என்கவி
செப்புதல் தன்னிய றிந்திருப்பீர் ! என்
உருவினை எங்கனும் உற்றுமே கணங்களில்
ஓடிட எங்கனும் கண்டறியீர் !
இன்றுதான் நும்மடல் ஏற்றநன் கரங்களில்
எழுதினேன் இம்மடல் மறுகணமே – என்
நன்றியை காட்டினேன் நட்பினை தந்ததால்
நம்முடை நட்புவ ளர்ந்திடவே !
நும்பசி தீர்த்திட என்கவி கேட்டதால்
நொடிகிறேன் காலமும் இன்மையினால் – மலர்சி
திருவிடம் காட்டிய கவியினை இத்துடன்
தீட்டியி னைத்துயான் அனுப்புகிறேன் !

எழுதியவர் : இராம்பாக்கம்.கவிஞர்.கனிம (28-Jun-15, 12:28 pm)
பார்வை : 109

மேலே