நிறுத்துங்கள் அப்புறம் கவிதை எழுதலாம்

... நிறுத்துங்கள்! அப்புறம் கவிதை எழுதலாம்...!

நான் கருவிலேயே
கலைக்கப்படவில்லை

நான் சிசுக் கொலையிலும்
சிக்கிக் கொள்ளவில்லை

பெண் என்பதற்காக பள்ளியில்
சேர்க்கப்படாதவர்கள் பட்டியலில்
என் பெயர் இல்லை

பெரியவள் ஆனதற்காக
வருகை பதிவேட்டிலிருந்து
நீக்கப்பட்டவர்கள் வரிசையில்
நான் இல்லை

திருமணம் நிச்சயிக்கப்பட்டதால்
கல்லூரி வாழ்க்கையை
தொலைத்த தோழிகளில்
ஒருவள் நான் அல்ல

வரதட்சணை பாக்கியால்
நின்று போன கல்யாண தாலி
எங்கள் வீட்டில் இல்லை

மாமியார்கள் இல்லாத நேரத்தில்
சிலிண்டர் வெடித்து சிதறிய உடல்களில்
என் உடல் இல்லை

குழந்தைகளுக்காக மட்டுமே வாழும்,
குடிகாராக் கணவர்களின்,
கூலிக்கு செல்லும் மனைவிகளில்
ஒருத்தி நானல்ல

சமையலறையிலேயே சமாதியான
பெண்களின் தியாகத்திலும்
எனக்கு பங்கு இல்லை

பிணம் தின்னி காம கழுகுகளுக்கு
இரையாகி புதைந்து போனவர்கள் மத்தியில்
எனது எலும்புக் கூடுகள் இல்லை

எனவே நான் அனைவருக்கும் சேர்ந்தே
கனவு காண்கிறேன்

நிஜங்கள் சுடுவதை முதலில் நிறுத்துங்கள்
பிறகு கனவு மெய்ப்படுவதைப் பற்றி
கவிதை எழுதலாம்

எழுதியவர் : இ ஆ சதீஸ்குமார் (30-Jun-15, 12:27 pm)
பார்வை : 92

மேலே