யாரோ யார் யாரோ

வானத்தில் பவனிவரும் கானகத்துப் பறவைகளே!
மேகத்தை யார் மலைமேல் தவழச் செய்தது ?
காற்றிலே மிதந்து வந்து காதுகளை குளிரவைக்கும்
ராகத்தை யார் உலகில் படைத்திட்டது?

அழகின் பரிணாமம் அங்கங்கு தெரியும் வண்ணம்
தங்கத்தை யார் தசையில் உருக்கி வார்த்தது ?
அமைதியாய் இருந்து கொண்டு ஆடவரை ஆட்டிவைக்கும்
அழகின் சக்தியை பெண்ணுக்கு யார் தந்தது?

கூட்டிலே குஞ்சுகளை ஊட்டி வளர்க்கும் குருவிக்கு
காட்டிலே குடும்பம் யாரமைத்து தந்தது?
காலத்தால் முடிவுறாத காதல் போராட்டத்தை
ஞாலத்தில் யார் முதலில் துவக்கி வைத்தது?

சிப்பிக்குள் முத்தை வைத்து சிவப்பிலே கவர்ச்சி வைத்து
தித்திக்கும் தேனில் யார் சுவையை வைத்தது?
பருத்திக்குள் பஞ்சைவைத்து பார்வைக்குள் ஒளியை வைத்து
ஒருத்திக்கும் ஒருவனுக்கும் யார் உறவை வைத்தது?

பாவத்தைச் செய்ய வைத்து பரிசுத்தம் தேட வைத்து
லோகத்தில் யார் நம்மை அலையவிட்டது?
கோபத்தை சோகத்தை பாசத்தைப் பெற்றிருந்தும்
உலோகம் போல் யார் நம்மை மாற்றி விட்டது??

எழுதியவர் : பீமன் (5-Jul-15, 10:45 am)
Tanglish : yaro yaar yaro
பார்வை : 101

மேலே