செய்தித்தாள்
நேற்று இறந்த செய்திகளின்
இறுதி ஊர்வலமாய் இன்றைய நாளிதழ்.
தொடக்கம் முதல் முடிவு வரை
அச்சிடப்படுகிறது மனிதப்பிழைகள்.
அச்சிடுவதிற்கு இங்கு
ரத்தங்களே மையாக்கப்படுகிறது
அரசியல் இட ஒதுக்கீடு சண்டைகளோடு
முடிந்தது முதல் பக்கம்.
கொலை என்னும் தலையங்கத்தில்
தொடங்கியது மறுபக்கம்.
கள்ளக்காதல் விபரத்தில்
கடந்தது சில பக்கம்.
காதலியைக் கொன்ற காதலனுக்கு
ஒரு பக்கம்.
மார்பினை 33% மட்டும் மறைத்து
பெண்ணுரிமை காக்கும் நடிகைகள் ஒரு பக்கம்.
தலை வாங்கிய கதைகளுக்கே
தலையங்கம் இங்கே தீட்டப்படுகிறது.
முதல் பக்கத்தில் இட ஒதுக்கீடு செய்து
கள்ளக்காதலை கொண்டாடுகிறது.
விபச்சாரிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவமும்
விவசாயிகளுக்கு கொடுக்கப்படுவதில்லை.
பக்கங்கள்தோறும் எழுத்துக்கள் வடிவில்
உடல்கள் செத்துக்கிடக்கிறது.
கற்பழிப்பு,அமிலவீச்சு,கொலை,வன்புணர்வு என
அசைவத்துக்கு அடிமைப்பட்டு கிடக்கிறது செய்திகள்.
இத்தனையையும் பார்த்துவிட்டு
ஒரு பக்கத்தின் மூலையில்
அமர்ந்திருந்தான் வள்ளுவன் தலை குனிந்து...