கரம் கொடுப்போம் - அழகர்சாமி சுப்ரமணியன்
ஆராரோ பாடிடத்தான் யாருமில்ல
யாரோட பிள்ளைன்னு நானும் சொல்ல
தொப்புள்கொடி பந்தமுன்னு யாரச்சொல்ல
குப்பத்தொட்டி பெற்றெடுத்த பச்சபுள்ள
சொந்தம் பந்தமேதுமில்ல!
சொல்லிகத்தான் நாதியில்ல!
காட்டியல யாருமில்ல!
கட்டிக்கத்தான் துணியுமில்ல !
அவ பத்தினியா இருந்திருந்தா ?
நா பட்டினியா கிடப்பேனா ?
அவ உத்தமியா இருந்திருந்தா ?
ஊரும் என்ன ஏசிடுமா?
பத்து மாசம் சுமந்தவதான்
பாரமுன்னு நெனச்சாளோ?
பாசத்த மறந்து ஏனோ
வீதியிலே வெதச்சாளோ?
படுக்கைக்கு பணயம் வச்சு
பாவி என்ன பெத்தாளோ?
பெத்ததுமே கொல்லமா
நித்தம் என்ன கொன்னாளே
நடுத்தெரு நாய்கூட
தன் தாய்கூட சுத்துதடா
நாதியற்று வீதியிலே
நிற்கதியா நிக்கிறேனே !
கையேந்தி நிக்கைலே
பிச்சை என் பேராச்சே
சோறு போட யாருமில்ல
வேரறுந்து நிக்கிறேனே !
ஒத்த வேள சோத்துக்தான்
செத்து செத்து பிழைக்குறேனே
தாயும் என்ன விட்டுப் புட்டா
தாய் மண்ணும் சுட்டதடா
எச்சமா பொறந்ததால
துச்சமா நினச்ச சொந்தம்
மிச்ச மீதி கூட இந்த
பச்சமண்ணு பாக்கலையே
தோழனாய் விதி மாற
வீதி என் வீடாச்சே
நான் செய்த பாவமென்ன ?
விதியோடு விளையாட
பிள்ளைக்காக ஏங்கும் தாயே எனை
பிள்ளையாக ஏற்பாயோ ? பெயர் சூட்டி அழைப்பாயோ
தாயென்று உனையழைக்க தத்தெடுத்து வளர்ப்பாயோ
உறவென்று உனைக்காட்ட வரமொன்று தருவாயோ
-கவிஞர் (அ.சு)