பெண்ணே என்ன தான் நீ எனக்கு

மனமுடைந்து நானும் வாடும் தருணத்தில்
முகம் புதைத்து அழுதிட உன் மடி தருகிறாய்
என்னை ஈன்றெடுக்காத தாயா நீ?

திருட்டு தனமாய் சிகரெட் பிடிப்பது தெரிந்ததும்
கனலாய் கோபம் கொண்டென்னை கண்டிக்கிறாய்
மீசை இல்லாத தந்தையா நீ?

வெற்றி தோல்வி பேதம் இல்லாமல்
நான் எடுத்த முயற்சிக்கு பாராட்டு கொடுக்கிறாய்
என்னை நன்கு புரிந்த தோழியா நீ?

உடல் சுகமின்றி நீ வாடும் போதெல்லாம்
என் தோளில் நீயும் உன் தலை சாய்க்கிறாய்
நான் பெறாது பெற்றெடுத்த பிள்ளையா நீ?

மெல்ல நடையை நீயும் நடந்து
என்னை நோக்கி வருவதை கண்டதும் மகிழ்கிறேன்
என் உதடோரம் பூக்கும் சிரிப்பா நீ?

செல்ல கோபம் கொண்டென்னை ஒதுக்கி
அமைதியாய் நீயும் இருந்திட அழுகிறேன்
என் விழியோரம் தோன்றும் கண்ணீரா நீ?

தூக்கத்தில் கூட என் நிலை மறந்து
உன் நினைவுகளில் நானும் மூழ்கி கிடக்கிறேன்
இரவை அலங்கரிக்கும் கனவா நீ?

ஒரு நொடி கூட உனை நான் மறவேன்
மறந்தால் அந்நொடி இறந்ததாய் நினைக்கிறேன்
என் இதயம் துடிக்கும் துடிப்பா நீ?

கண்ணாடியாய் மாறினேன் நான் உனக்கு
நீ சிரிக்கையில் சிரிக்கிறேன் அழுகையில் அழுகிறேன்
என்னோடு கலந்துவிட்ட உணர்வா நீ?

கேள்விகள் ஆயிரம் உள்ளதடி
அத்தனையும் கேட்ட பின்
என் மனம் சொல்லிய பதிலில் குழப்பங்கள் தீர்ந்ததடி
இந்த மண்ணில் நான் வாழ போகும் வாழ்வே நீ தானடி…!!!

எழுதியவர் : தண்டபாணி @ கவிபாலன் (16-Jul-15, 1:14 am)
பார்வை : 129

மேலே