விரைவாய் செயல்படு

துன்பத்தைக் கண்டு கலங்காதே
துரத்திடத் துணிந்திடு மயங்காதே
வீழ்ச்சியில் விதையாய் முளைத்துஎழு
வீணர்கள் பேச்சினைக் காற்றில்விடு

கையையும் காலையும் முடக்கிக்கொண்டு
கவலையில் தினமும் மூழ்காதே
காலங்கள் உனக்குக் கைகொடுக்கும்
கடமையை உணர்ந்திடு வழிபிறக்கும்

தவறியே தவறுகள் செய்துவிட்டால்
தவித்துநீ தனியாய் புலம்பாதே
துவக்கத்தில் அதனைக் கண்டறிந்து
திருத்திடு குறைத்திடு உனைஉணர்ந்து

சிந்தித்துத் தவறைத் திருத்திவிட்டு
செய்கையில் மேன்மைக் காட்டிவிடு
நடந்ததை எண்ணி வருந்தாமல்
நடப்பதில் சிறப்பை கூட்டிவிடு

மற்றவர் கருத்துக்கு மதிப்பளித்து
மனம்விட்டு மகிழ்ந்தே உரையாடு
மனச்சுமை குறைந்து மனம்மகிழும்
மாற்றுவழி ஒன்று கிடைத்துவிடும்

பசியெனச் சொல்லிப் பலம்புவதால்
பருக்கைச் சோறேனும் கிடைத்திடுமா?
பாடுபட்டே தினம் உழைத்தாலே
பசிஉன்னை அண்டிட நெருங்கிடுமா?

தோல்விகள் உனக்குப் பாடம்தரும்
தோற்றபின் மனதில் வீரம்வரும்
விரைவாய் வாழ்வில் செயல்பட்டு
விரைந்துநீ அடைவாய் கல்வெட்டு.

எழுதியவர்
பாவலர். பாஸ்கரன்

எழுதியவர் : (22-Jul-15, 8:11 pm)
சேர்த்தது : சொ பாஸ்கரன்
பார்வை : 69

மேலே