மந்திரக் கோலின் நுனியிலிருந்து
தெருவித்தைக் காரனின்
பழகிய விலங்கென
வந்து கொண்டிருக்கிறார்கள்
மௌன சாட்சியாய் நின்றவர்கள்.
அறங்களனைத்தும் அழிய
சுடுமூச்சுக்களால்
பாலையாய் கோர்க்கப்படுகிறது
கெட்டித்துப் போன மண்.
அவிழ்ந்த மலைத் தொடர்களில்
வன் பறவைகள் பசியாறி
குருதி அலகுகளுடன்
இடையறாது பேசுகின்றன
போதி மரத்தின் வேர்களை.
கருத்திருக்கும் பெருநிலத்தில்
ஊமத்தைகள் தளும்ப
சடலங்களின் வாசனையோடு கடக்கிறது
கறை படிந்து உறைந்த வெயில் பொழுதுகள்.
மலடு தட்டிய எனது நிலத்தில்...
நீர் வற்றிய கருவறைகளில்
அசைவற்றிருக்கிறது
புதிய தலைமுறை.
பிளவுகளில் கிளை பரப்பி
இனம் அழித்த இனம்
எனது கொடுங்கனவுகளில்
உறைந்து மறைகின்றன.
நம்பிக்கைகளின் வானம் ஆவியாகிவிட
புதைமேடுகளில் புல் முளைத்த பின்
ஒரு மந்திரக் கோலின் குப்பி நுனியில்
உருகி வழியலாம்
ஒரு நீண்ட உதயம்.