ஏமாற்றுக்காரி

காலமகள் கொடையான கண்கவரும் காகிதம்
==காதலுடன் வரைந்திடலாம் கலையழகு ஓவியம்
பால்வடியும் பூமுகமோ பௌர்ணமியின் சீவியம்
==பாவலர்கள் படைத்திடலாம் பனித்துளிக்கு காவியம்
நூலிடையி னோரத்திலே நூதனமாய் நூலகம்
==நுழைவாச லெனவமைந்த மன்மதத்த பாலகம்.
ஆலிங்கனம் புரிவதற்கழைப் பிதழென்னும் சோபனம்
==அரவவிழி அனுப்புமெனி லடைந்திடலாம் சீதளம்.

தேன்வழியும் பாத்திரத்தில் திரியுதிரு மீனினம்
==தெருப்பிச்சைக் காரனையும் ஈர்த்தெடுக்கும் ஊனினம்
வான்மழைக்கு புனல்வழங்க இதழுதிர்க்கும் கீர்த்தனம்
==வானவில்லை புருவமென வளைத்தெடுத்த நூதனம்
ஊன்முதலுயிர் உலுப்பிடுமதி சயபேரெழில் மானினம்
==ஒருதடவைக் கண்டுவிடின் துறந்திடுவர் ஊணினம்
கூன்பிறையாம் நுதலின்மேல் குங்குமத்தை ஆணினம்
==கொட்டிவிட படையெடுத்துக் குமுறுகிற வீணினம்

ஆசையெனும் ஊஞ்சலிலே ஆடவரை ஆட்டி
==ஆசையிலாப் பேர்களையும் அவர்களுடன் கூட்டி
ஓசையில்லா வகையினிலே உயிரில்தீ மூட்டி
==உலவுகின்ற தென்றலுக்கு உள்ளங்கம் காட்டி
தோசைக்கல் வீழுகின்ற மாவேனவே வாட்டி
==துவளவிடும் தோகைமயில் பட்டினியை ஊட்டி
பூசைக்கென காத்திருக்க கோயிலையே பூட்டி
==பக்தர்களை ஏமாற்றும் பைங்கிளிச்சீ மாட்டி

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (24-Jul-15, 3:42 am)
பார்வை : 276

மேலே