‘ பா ‘ தன்னில் கருப்பெற்றாள்
நம்நாடு நமக்கன்றி , வேறு யாவர் !
நம்நாட்டை , நமையாள தகுதிப் பெற்றார் ?
எம்மோடு தோள்புடைத்து வருக , நம்மின்
எழில்நாட்டை தனிநாடாய் கொள்வோமென்று
தெம்போடு கலம்கண்டார் ! சூழ்ச்சிகாரர்
தூள்படவே மாண்டிடவே ஏறாய் ! நெஞ்சால்
இம்மட்டோ எனமண்ணோர் வியக்கும் வண்ணம்
இயற்றிட்டான் சாதனைகள் வளவ வேந்தே !
பனைமரத்தை நம்பியுள்ள தொழிலாளர்கள்
பரதவித்து வரிக்கொடுமை தாங்கிகிடாது
முனைகுருத்து வெட்டுண்ட தென்னைபோல
முடங்கிட்டார் பட்டுவிட லாமோ ? என்று
கணைஎடுத்து சொல்லம்பு மாரிப் பெய்து
கலங்கிடவே செய்திட்டான் ! ஆண்டார் மாறி
உனையெதிர்க்க எம்மாலே முடியாதென்றே
உடைத்திட்டார் வரிச்சுமையை ! வாகை கொண்டான் !
தாயின்மேல் ஆணையிட்டு தமிழன னோங்க
தமிழருடைப் பேரரசு நிலவ , வானில்
ஓயாமல் தமிழ்க்கொடியோ பறக்க , மாண்பில்
உலகெங்கும் தமிழோசை யொலிக்க , யாண்டும்
தேயாமல் பண்டுபுகழ் நிலைக்க , சுற்றித்
திரிந்திட்ட இந்திநரி மலைக்க , கானில்
பாயாத வேங்கையென வென்றான் ! என்றான்
பாதன்னில் கருப்பெற்றான் தமிழன் என்கோ !