அனைவரும் சலாம் போட்ட ‘கலாம்’
மீனவர் சமூதாயம் தீட்சைப்பெற்றது உன்னால்
மாணவர் சமூதாயம் எழுச்சிப்பெற்றது உன்னால்
ஆராய்ச்சியாளர்கள் அனுபவம்பயின்றது உன்னால்
அரசியல்வாதிகள் அடக்கம்பயின்றது உன்னால்
பள்ளிக்கல்லூரிகள் கொண்டாட்டம் கண்டது உன்னால்
வெள்ளை மாளிகைகள் திண்டாட்டம் கண்டது உன்னால்
ஆன்மீகிகளாலும் ஆராதிக்கப்பட்டது உன் அணுஆயிதம்
அன்னியர்களாலும் பாராட்டப்பட்டது உன் மனோதைரியம்
ஜாக்கிஜானை காட்டிலும் துருதுருப்பானவரே
ஜப்பானியரை காட்டிலும் சுறுசுறுப்பானவரே
ஈ ஓட்டிக்கொண்டிருந்த இந்தியாவை
பொக்ரான் அணுகுண்டால் வான்நிமிறச் செய்தவரே
உன் அணுஆயித ஏவுகணைகள்
உலகளவில் ஓயாத அலைகளாய்
ஓங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன !
வெள்ளை மாளிகை உன்னை
வெற்றிலைப்பாக்கு வைத்து அழைத்தது
சோவியத் யூனியன் உன்னை
ரத்தினக்கம்பளம் விரித்து உபசரித்தது
சீனக்காரன் உன்னை சினேகம் பிடிக்க
துடியாய் துடித்து தோற்றுப்போனான்
ஜப்பான் நாட்டான் உன்னை வளைக்க
முட்டிமோதி மூக்கறுப்பட்டான்
இப்படி எத்தனை எத்தனையோ நாடுகள் உன்னை
தத்தெடுத்துக்கொள்ளத் தவியாய் தவித்தப்போதும்
தாய்த்திருநாட்டின் தன்மானம் காக்க;
தக்க வருமானத்தையே இழந்தவன் நீ !
எவருக்கும் பயப்படாத அக்னிக்குஞ்சே
அனைவராலும் படிக்கப்படும் உன் அக்னிசிறகே
தேடி நீ அலைந்ததில்லை பதவி சுகம்
அப்பதவிகள் உன்னால் அடைந்தது கவுரவம் !
உன்னொருவனுக்காக மட்டுமே நீ கனவு காணவில்லை
உலக மக்கள் அனைவருக்காவும் சேர்த்தேக் கண்டாய் !
சுயநல நோக்கோடு நீ ஒருப்போதும் உழைத்ததில்லை
பொதுநல நோக்கோடுதான் எப்போதும் உழைத்தாய்..!
வல்லரசுப்பட்டியலில் இந்தியாவை முன்னெடுத்துச்செல்ல
நீயெடுத்த முயற்சிகள் ஜநா சபையிலும் எதிரொளித்தன !
விருதுகளை எருதுகளாய் கருதியவனே
இறுதிவரை எளிமையாகவே வாழ்ந்தவனே
உறுதியில் உடும்பாய் உலாவந்த நீ
இறந்த சேதி இந்திய தேசத்தையே
கண்ணீரால் அல்ல குருதியையே சுண்டவைத்துவிட்டது
ஜனநாயக நாட்டில் ஜனாதிபதி பதவியென்பது
வெறும் டம்மி பீஸாக பார்க்கப்பட்டது- ஆனால்
நீ பதவி வகித்தப்போதுதான் ஜனாதிபதி பதவி
கும்மியடித்து ஆராதிக்கப்பட்டது !
மக்கள் பிரதிநிதிகளின் ஜால்ராக்களாக ஜனாதிபதிகள் இருந்த காலம்ப்போய்
ஜனாதிபதியின் இரும்புப்பிடியில் மக்கள்பிரதிநிதிகள்
இருந்தது உன்காலத்தில்தான் !
உன்னால் உன்னால் மட்டும்தான்
அந்த அதிசயத்தை நிகழ்த்த முடிந்தது
ஏனெனில் நீ எவருக்கும் அஞ்சாத
ஏவுகணையாக இருந்ததால்..!
பாராளூமன்றம் என்னதான் தீர்மானம் போட்டாலும்
உன் பார்வைக்கு வரும்போது
அதில் நேர்மையில்லையென்றால்
உன் கைகள் கையெழுத்திட கடைசிவரை மறுக்கும்-அதை
பொறுக்கமாட்டாமல் பாராளுமன்றம் முணுமுணுக்கும்..!
உனக்கு தெரிந்ததெல்லாம்
நன்நடத்தையில் தூய்மை
பொதுவாழ்வில் நேர்மை
அணுஆய்வில் கூர்மை
ஆட்சிப்பணியில் எளிமை
இறுதிவரை கணவனாகாத கனவுக் கனவானே
இறைவனின் நிழலில் நிம்மதியாய் இளைப்பாரு !
இஸ்லாமியரின் பிறையில் தெரியும் விண்மீனாய்
உன்னைத்தொழுது உயிர்வாழ்வோம் !
உன் பெயரைச்சொல்லி மரம் நடுவோம் !
ஆளுக்கொன்றாக, நீ ஆண்டவனின் உயிர்ப்பாக !