கலாமின் நினைவுகளில்

தேனி கார்த்திகேயனின் ஓவியப் பதிவே மேலுள்ளது. இதன் கீழ் கவின் சாரலன் ஔவையாரின் பாடலையும் ஓவியத்தில் இணைத்துத் தீட்டியிருக்கலாமே என்ற கருத்தைப் பகிர்ந்திருந்தார். அப்பொழுது எழுந்த சிந்தனை இப்பாடல்கள் ; முதலிரண்டு அடிகள் ஔவையாரின் பாடல் வரிகள் ;பின் வருபவை என்னுடையவை. இனிப் பாடல்கள்:

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்,தருவேன்- சீலனே
எங்கள் இளைஞர்கள் எல்லோர்க்கும் நற்றுணையாம்
தங்கக் கலாமையே தா!-------------------------------------------------------------------------------------------------------------------------(01)

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்,தருவேன்- சீலனே!
எங்கள் கலாமை,நீ எங்கழைத்துப் போவாய்?எம்
பொங்கு துயர்தீர்த்துப் போ!--------------------------------------------------------------------------------------------------------------------(02)

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்,தருவேன்- சீலனே!
பிறந்தபொன் நாட்டின் பெருமைக்கே வாழ்ந்து
சிறந்தகலாம் மீட்டெமக்குச் சேர்!----------------------------------------------------------------------------------------------------------(03)

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்,தருவேன்- சீலனே!
காலனின்கால் கட்டிக் கலாமை எமக்களிக்கக்
கோலமிதை உன்கயிறாய்க் கொள்!------------------------------------------------------------------------------------------------------(04)

ஒன்றுக்கு நாலாக ஒப்பில் தமிழ்தந்தேன்!
என்றைக்கும் போல்,கோலம் இட்டவளாய் -கன்றாய்
இளைஞர் அழுகை,தீர்! எம்கலா மைத்தா!
உளைவார் துயர்களைய ஓர்!
======== =======தேனி கார்த்திகேயனின் அழகிய இந்த ஓவியத்திற்காக அவருக்கு என் நன்றிகள்===

எழுதியவர் : காளியப்பன் எசேக்கியல் (31-Jul-15, 8:30 pm)
பார்வை : 81

மேலே