காலக் கண்ணாடிக் கூசாவின் மண்ணில்
என்னுடைய கண்கள் உன்னுடைய விழிகளின்
கண்மணியாம் கருங்குட்டையில் நீந்திச் சுழலும்
என்னுருவைத் தேடிக் கொண்டே இருக்கும்;
எனது நெஞ்சமோ எனில் இருண்ட புறநகரில்
சனநடமாட்டமிலா சாலையில் மணியடித்து
சாங்கியம் போலொரு பால் வண்டிக்காரன்
தூங்குமூஞ்சி வீட்டு வாசல்களில் தொங்கும்
தூக்குகளில் குவளைகளில் பாலை ஊற்றுவதை
நினைந்து நாடகம் பார்க்கும் இவ்வேளையில்
என்னை நீ “கிழம்” என்று கிண்டல் செய்கின்றாய்.
விடுமுறை நாட்களில் நீ தனியே விரும்பி நடக்கையில்
கடற்கரையில் உடைந்து கிடக்கும் எலும்பென என்னை
காலங்களைக் கடந்த ஓலக் கூடாய் நீ நினைக்கையில்
நான் அங்கேயே சோம்பிக் கிடந்திருக்கலாம்.
ஆனால் பக்கத்து வீட்டுக்காரனிடம் சொல்லி விட்டு
காணாமற் போய் தற்கொலை செய்து கொண்ட உன்னை
நினைவுக் கடலில் நித்தமும் மிதப்பவளாய் காணும்
நான், என்றோ தொலைந்த காதலி ஒருத்தி
இன்று திரும்பக் கிடைத்ததாய் நினைத்து எனது
பழைய ஞாபகத்தில் உன்னை அணைக்கின்றேன்
காலக் கண்ணாடிக் கூசாவின் மண்ணில்.