சிந்தும் சில வரிகள்
காத்திருப்பேன் காதலுடன்
மூடி வைத்த பேனாவோ - என்
விரலை மட்டும் விரட்டுதடி !
தீர்ந்து போன தாள்கள் எல்லாம்
மேசை மேல் முளைக்குதடி !!
கசக்கிப் போட்ட கவிதையும்
கண் முன் வந்தது கைசேர
நீங்கிப் போன நினைவுகள் எல்லாம்
நீந்தி வந்தே நிரம்புதடி !!
இமைமூடிப் போன விழிகளும்
விழித்து கொள்ள விரும்புதடி !
அணைத்து வைத்த கைப்பேசி
அடிக்கடி அலற துடிக்குதடி !!
சுருங்கிப் போன முகத்தோலும்
விரும்பி கேட்டது வெந்நீரை !!
உள்ளிருக்கும் செல்லனைத்தும்
உன் கண்ணைப் பார்க்க ஏங்குதடி !!
தேதி இல்லா நாள்காட்டி
தேடித் திரியுது இந்நாளை !
தூக்கி வீசிய தோல்பையும்
தொடர்ந்து வருகுது என்பின்னே !!
அழுக்காய் இருந்த ஆடைகளும்
சலவை செய்ய சொல்லுதடி !!
சுற்றித் திரிந்த என் கழுத்து
அசைய கூட மறுக்குதடி !!
தோலைக் கருக்கும் இவ்வெயிலும்
தென்றல் போலத் தெரியுதடி !
என்றும் சிரிக்கா என் இதழும்
இன்று சிரித்தே மகிழுதடி !!
விட்டுக் கொடுக்கும் என் குணமும்
சொல்லித் தந்தது சுயநலத்தை !!
சிதறிப் போகா என் சிந்தை - சிதறிப்போய்
சிணுங்கி கொண்டே சிரிக்குதுதடி !!
கர்வம் கொண்ட என் கனவு
கண்ணீர் வடித்துக் கலங்குதடி !
விட்டுப் போன என் உயிரும்
உடனே என்றன் உடலில் இறங்குதடி !!
இத்தனை நடப்பதும் ஏன் பெண்ணே ???
தேவதை நீ என் கண் முன்னே !!
காதலை கேட்கிறேன் நினைவிழந்து
நிஜத்தைக் கொஞ்சம் திருப்பிக் கொடு !!
என்றும் எனை நீ தேடி
அன்பை மட்டும் தந்து விடு !!
சொல்லி விட்டேன் என் அன்பை
நானும் முடிவும் உன் கையில் !!
சேர்த்து வைக்கிறேன் கனவுகளை
அன்பின் அடிமையாய் நாம் வாழ !!
அழகியல் அன்பு அதுவாக ......
தேவதை நீ திரும்பிப் போனால்
என் தெருவும் தீப்பற்றி எரியுதடி !!
காத்திருப்பேன் காதலுடன் - அன்னை
தமிழின் அரவணைப்பில் - உன்
நினைவுகள் துணையோடு !!
கற்றவரே கொஞ்சம் நில்லும்
செல்வம் வேண்டும் செல்வம் வேண்டும்
என் சந்ததிக்காய் அதை கொடுக்க வேண்டும்
செலவிற்கு காசு பணம் கொடுக்க வேண்டாம்
நீர் கற்றறிந்த கல்வியினை கற்றுத்தாரும்...
செழிக்க வேண்டும் செழிக்க வேண்டும்
என் சமுதாயம் என்றுமே செழித்திடல் வேண்டும்
அணிவதற்கு வேட்டி சட்டை கொடுக்க வேண்டாம்
மானம் காக்க கல்வியினை கற்றுத்தாரும்...
ஒளி ஏற்ற வேண்டும் ஏற்ற வேண்டும்
என் சமூகம் அதிலே ஒளிரவும் வேண்டும்
ஒளிக்காக மின் விளக்கு கொடுக்க வேண்டாம்
வாழ்வு பிரகாசிக்க கல்வியினை கற்றுத்தாரும்...
பெற்று விட்டோம் பெற்று விட்டோம்
எளியோர் பட்டந்தனை பெற்றும் விட்டோம்
ஏற்றத் தாழ்வு பார்க்க வேண்டாம்
ஏழைக்கும் சமவுரிமை கல்வியினை பெற்றுத்தாரும்...
கேட்க வேண்டாம் கேட்க வேண்டாம்
எம் பசியறிந்தும் இலட்சங்கள் கேட்க வேண்டாம்
எங்களுக்கு வீடு வாசல் கொடுக்க வேண்டாம்
இலட்சியங்கள் அடைகின்ற கல்வியினை கற்றுத்தாரும்...
மாற வேண்டும் மாற வேண்டும்
எம் மக்களுக்காய் நீர் மாற வேண்டும்
உன் வாழ்க்கை முறை மாற்றவேண்டாம்
வியாபாரம் விட்டுவிட்டு கல்வியினை கற்றுத்தாரும்...
நல்லமனம் பெரிய மனம் கொண்டவரா நீர்??
ஏழைகளின் கல்விக்காக உதவிகளைப் புரிந்த்துடுவீர்..
மாறிவிடும் மாறிவிடும் எம்மக்கள் வாழ்வு மாறிவிடும்
கல்வி மட்டும் கிடைத்துவிட்டால் ஏது தாழ்வு??
கற்பனைக் காதலிக்கு
காலமெல்லாம் வயது பதினாறு
காதலால் என்னைக் கொஞ்சுவாள்
கவிதைப் பிள்ளை கோடி பெறுவாள்
கட்டழகு குறையாதவள் - தன
கண்களில் கண்ணீர் பொழியாதவள்
கணப் பொழுதேனும் கவலையுறாள்
கட்டி அணைத்தே கலந்திருப்பாள்
கண்கள் மூடி ரசித்திருப்பாள்.....
கைகளை கோர்த்துக் கொள்வாள்
காற்றோடு என்னுடன் மிதப்பாள்..
குருவிக் கூட்டுக்குள்
குடிபுகுந்து நாங்கள் மகிழ்ந்திருப்போம்
குஞ்சுகளின் அலகுக்குள்
குங்குமச் சிமிழ் காண்போம்.....
இவள் நிறமோ இதழ் நிறமோ
இதயத்தால் ரசித்திருப்பேன்......
இரவு பகல் போதாது இறைவா
இன்னும் நேரம் கொடு எனக்கு
இவளோடு என் வாழ்க்கை
இனிதாகப் போகட்டும்......
இன்னும் இன்னும் இன்னும்
இனிய கவிப் பிள்ளைகள்
இதயத்தின் வழி பிறக்கட்டும்......!
வாழ்த்துகின்ற நெஞ்சம் கோடி....
வசந்தமே வா எம்மைத் தேடி...!