கலாமுக்கு இறுதி சலாம்
கலாமுக்கு இறுதி சலாம்
கலாமுக்கு இறுதிசலாம் நாமே சொல்வோம்!
===கலாம்வழியில் சென்றேநாம் உலகை வெல்வோம் !!
நிலாவொத்த நன்நடையால் சுழன்றார் நாட்டில்!
===நிஜமனதில் குழந்தையானார்! பெருகும் அன்பால்
உலாவந்த மாணவரை எழுச்சி மிக்க
===உரையாலே தாழ்ச்சியின்றி தன்பால் ஈர்த்தார்!
துலாக்கோல்போல் துணிவுடனே ஆட்சி செய்தார்!
=== துன்பத்தில் உழன்றோர்க்கு விடியல் தந்தார்!
மாளிகையில் இருந்தாலும் எளிய வாழ்க்கை!
===மனிதநேயம் ஒளிர்கின்ற தன்னம் பிக்கை!
களிகூர்ந்து வருவோரை மதித்துப் போற்றி
===கருணையாலே பலபணிகள் முடித்து வைத்தார்!
வளிசூழா விண்வெளியில் புரட்சி செய்தார்
===வான்பார்த்து கற்போர்க்கும் வழியாய் நின்றார்!
குளிர்மண்ணில் குடிகொண்டார் தலைவர் என்று
===குடிமக்கள் குமுறுகின்றார் கண்ணீர் சிந்தி !
உறங்கவிடா கனவுகளால் எழுச்சி பொங்க
===உலகமெங்கும் நம்தமிழின் பெருமை ஓங்க
மறத்தமிழன் வள்ளுவனின் வழியில் நின்று
===மன்றமெங்கும் அவர்கருத்தை மொழிந்தார் நன்று!
முறசரைந்து ஐநாமன்றில் “யாதும் ஊரே
===யாவரும் கேளீர்” ரென்றே விளக்கம் தந்தார்!
உறங்குமணு ஆற்றலையே அணுகுண் டாக்கி
===உயர்த்தெழும் ஏவுகணையை உயர்த்தி வைத்தார்!
கலாம்நனவை நம்நெஞ்சில் நிறுத்தி, அன்று
===கனவுகண்ட இந்தியாவை கண்முன் காண்போம்!
நலமுடன்நாம் வாழஅவர் வகுத்தார் திட்டம்
===நாமதனை நிறைவேற்ற இந்தியாவே
நிலமதிலே வல்லரசு நாடே யாகும்!
===நிறைமனதால் உறுதிசொல்வோம்!! இணைந்து நாமே
கலாமுக்கு இறுதிசலாம் சொல்வோம்! சொல்வோம்!!
===கலாம்வழியில் சென்றேநாம் உலகை வெல்வோம்!!!
ராஜ்கவி @ சி. அருள் ஜோசப் ராஜ்