முன்னேற்றப் பாதையில்

எங்கள் வீட்டுத்
திண்ணைகளை உடைத்து
காம்பவுன்ட் சுவர்களில்
குரோட்டன்ஸ் வளர்த்து
அலங்கரித்துவிட்டோம்

தாமிரபரணியைத்
தொலைத்து மினரல்
வாட்டருக்காய் எங்களைத்
தகவமைத்துவிட்டோம்

கலோரிகள் அதிகமென
சோற்றைத் தவிர்த்து
ஒட்சுக்குத் தாவிவிட்டோம்

தாழ்வுமனப்பான்மையென்பது
கருப்பென கற்பிக்கப்பட்டு
உத்திகளைக் கண்டுவிட்டோம்
நிறத்தை மாற்றி விட

பிராண்டட் துணிகள்
பெருமிதமென
ஆப்பருக்காய் அல்லாட
ஆரம்பித்துவிட்டோம்

ஆகச் சிறந்த பிட்சா என்
அம்மா சுட்ட பிட்சாவென
எங்கள் மகன்கள் ஏங்க
ஏதுவாய் டிஎன்ஏவை
மாற்றஞ்செய்துவிட்டோம்

மார்பில் புற்றும்
இரத்தத்தில் சர்க்கரையும்
இதயத்திற்கு ஆஞ்சியோவும்
பைபாசும் வெகுமதியென
வெகுளியாகிவிட்டோம்

தாய் மொழியில் மொழிவது
வெட்கமெனப் புரிந்து
பேச்சினிடையில் நரகலையும்
வேசி மகன்களையும்
நாகரீகமாய் அழைக்கப்
பழகிவிட்டோம்

எங்கள் காடு கழனிகளைத்
தாரைவார்த்து
அயல்நாட்டனுக்கு
அடிமையென்று அயராமல்
உழைக்க உத்வேகம்
பெற்றுவிட்டோம்

சுதந்திர இந்தியா
வல்லரசாகிக்
கொண்டிருக்கிறது....!!!

எழுதியவர் : தர்மராஜ் (21-Aug-15, 7:32 pm)
பார்வை : 134

மேலே