நாளை என்னும் வசீகரம்

மேற்கின் முந்தியில்
செருகிக் கொண்டுவிட்ட
சூரியனிடமிருந்து
முளைக்க மறுக்கிறது காலம்.

முகமற்றுப் போன இரவு
ரேடியம் துளிர்த்த முட்களில்
துவங்குகிறது தன் காலத்தை.

உதிர்ந்த மலர்களில்
வந்து போகிறது
காலை பறந்து சென்ற
வண்ணத்துப் பூச்சியின்
சிறகுகள்.

திசைகள்
பனியில் உயிர்க்கையில்
கருநீலத்தில் பிறக்கிறது
வானம்.

இத்தனை இரவில்
கூடடையாத இந்தப் பறவை
எந்த இரகசியத்தைச்
சுமந்து செல்கிறது
எனத் தெரியவில்லை.

கற்பனைகள் தொங்கும்
என் கனவுகள்
தேவதைக் கதைகளில்
தொலைந்த யதார்த்தமாய்
பிசின் படர்ந்த வானங்களுக்கப்பால்
மலைகளில் பெருமூச்சுடன் இறங்குகிறது.

புகை மூட்டங்களாய்
கலையும் இந்த வாழ்வில்
கற்றுக் கொண்டது
நினைவிலிருப்பதில்லை
என்றாலும்...

வாழ்வின் வசீகரத்தில்
உயிர்க்கிறது நாளை.

எழுதியவர் : rameshalam (5-Sep-15, 7:28 pm)
பார்வை : 79

மேலே