காத்திருக்கிறேன் உனது மரத்தடியில்

* என்னையே
சுற்றி வந்து சுழலும்
மின் விசிறிகள்
உன் விழிகள் !
* உனக்கான
மின்சாரத்தைக்
கனவலைகள் தெறிக்குமென்
கண்களிலிருந்தே
எடுத்து விடுகிறாய்
இரகசியமாய் !
* உனது காற்றில்
கூதலையும் வேதலையும்
முன்னுக்குப் பின்
முரணாக வைத்திருக்கிறாய்
எப்போதும் !
* எனது
தவிப்பிலரும்பும்
வியர்வைகளை உறிஞ்சி
உனது வேர்களை
நிலை நிறுத்துகிறாய்
மிகுந்த கவனத்தோடு !
* வருடங்கள் கடந்தும்
வசந்த காலத்தை
ஒளித்து வைத்து
விளையாடுகிறாய் !
* எனது பெருமூச்சைச்
சுவாசிக்கிறாய் !
* கனி விழுமென்று
காத்திருக்கிறேன்
உனது மரத்தடியில் !
* கவிதை
விழுகிறது !
* பொறுக்கத்தான்
முடியவில்லை !
* பேப்பர்க் கூடை
நிறைந்து விட்டது !
* ஃபேஸ் புக்கில்
கொட்டி வைக்கிறேன் !
* யாருடைய
நாவுக்காவது
உன் சுவை
தெரிந்து விட்டுப்
போகட்டும் !
***