இதுவே வரம் தான் இறைவா

உருவங்கள் காணாத
உரசல்கள்
வண்ணங்கள் காணாத
கண்கள்..!!

குழந்தை முதல்
இன்று வரை
காணாத உலகம்
நான் காண
வரம் வேண்டி
வாங்கி வந்தேன்
ஒருநாள் பார்வையினை..!!

இங்கோ...

மார் மறைக்கும் பெண்களை
குறுகுறுவென காமப்பார்வை
பார்க்கும் ஆண்கள்..!

தலை கவிழ்த்தும் ஆண்களை
ஆசை தூண்ட மார்
மறைக்காப் பெண்கள்..!

புதர்களுக்கடியில்
புதுக்காதலர்கள்..!

சிவப்பு நிறம் பிடித்த
கூலிப்படைகள்..!

உயிர் துடிக்கும் வேளையிலே
அதைப் படம் பிடிக்கும்
படித்தவர்கள்..!

முதியோர்களை மதிக்காத
இளைஞர்கள்..!

கணவனை அணைத்தவாறே
அடுத்த வீட்டுக்காரனுக்கு
காற்றிலே முத்தங்களை
அனுப்பி வைக்கும் அன்பு
மனைவி..!

மனைவிக்குப் பேச்சொலியை
மட்டும் பரிசாக்கி விட்டு
கண்களை காம வேட்டைக்கு
அனுப்பி வைக்கும் அன்பு
கணவன்..!

வற்றிய நதி..!

பேச மறந்த
பெற்றோர்கள்..!

கொலை
கொள்ளை
கற்பழிப்பு..!

போதும் போதும்
என் பார்வையினை
மீண்டும் பறித்து
குருடனாக்கிவிடு..


"இதுவே வரம் தான் இறைவா"




செ.மணி

எழுதியவர் : செ.மணிகண்டன் (8-Sep-15, 1:56 pm)
பார்வை : 287

மேலே