சைவமாகும் பூனைகள்

பூனைகள் என்றும்
சாதுவானவைகள்தான்
பாலோ மாமிசமோ
கண்ணில் படாதவரை.

பூனை சைவமென்று
ஊர்ஜிதப்படுத்தப்படுகிறபோது
மீனுக்கு காவல் வைப்பது
மிகவும் நல்லதே..!

மீசையில் ஒட்டாமல்
குடிக்கத்தெரிந்த பூனையை
பாலுக்கு காவலாய் வைப்பது பாவம்

பாலும் மீனும்
பக்கம்பக்கமிருக்க
பட்டிமன்றம் நடத்திக்கொண்டிரா
பக்குவப்பட்டப் பூனைகள்
மீனைத் தின்றுவிட்டு
செரிமானத்துக்காய்
பாலையும் குடித்துவிட்டுப் போகலாம்.

மீன் விரதமிருப்பதை
பூனைக்குப் போதித்தடங்க
வைப்பதற்குப்பதிலாய்
பூனையை விரதத்துக்குப்
பழக்கப்படுத்துவதில்
பாதுகாக்கப்படலாம்
மீனும் பாலும்.

மதில்மேல் பூனைகளை நம்பி
பாலையும் மீனையும்
பார்வைக்கு வைத்துவிட்டு
பூனைகளை குறை சொல்லி
புலம்புவதிலும் பார்க்க
பாலையும் மீனையும்
மறைத்துவிடுங்கள்
பூனை சைவமாகி விடலாம்
அல்லது எலிபிடிக்கவாவது
கற்றுக் கொள்ளும்.

மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (15-Sep-15, 2:08 am)
பார்வை : 203

மேலே