ஏழாவது மனிதன் 2 - அகந்தை தவிர் - கட்டாரி

மகரந்தக் கரைசல்கள் பரப்பித்
திரிந்திருந்த
தாமரைக் குளமொன்றின்
நதிமூலம் தன்னுடையதென
மெச்சியிருந்தான் அவன்......
அவனுக்கானதெனச் சொல்லியிருந்த
தடாகங்களின் மேற்பரப்பில்
கொத்தி நீரெடுத்துப்
பறந்திருந்தன சில காகங்கள்...
யாதொன்றும் தெரியாமல்
நீருக்குள்
அமிழ்ந்தவாறே... நீரூட்டிக்
கொண்டிருந்த தண்டுகளுக்கும் ....
ஒரு கவண் வில்லின்
நடுப்புறம் துருத்தியிருந்த
மண் உருண்டைகளுக்கும்.....
நதிமூலவனையோ..
காக்கைகளையோ பற்றியதான
கவலை இல்லை.....
உருண்டை தாக்கிச்
செத்து வீழ்ந்த காக்கையும்
கால்வழுக்கித் தண்டுச் சிக்கலுக்குள்
புதைந்து போன அவனும்....
நதிமூலப் பெருமைகளோடே
மறைந்து விட்டிருந்த ....
பிறகான நாட்களிலும்
அழகாகவே
சிரித்துக் கொண்டிருந்தது
தாமரைக் குளம்.....!!