என் கிராமத்து பெண்ணிற்காக - உதயா

எண்ணத்தின் ஓட்டத்தில்
ஆனந்த இரதமேறி
கனவு உலகிற்கு
கணம் கணம் குடியேறி

முகம் பார்க்கும் கண்ணாடியில்
தினந்தோறும் பூவாய் பூர்த்துக் கொள்ள
இழுத்து அடைக்கப்பட்ட சன்னலின் வழியே
வாலிப வண்டுகளின் ஏக்கங்கள் புகுந்துக்கொள்ள

அவள் பூப்படைந்து
நிச நினைவிழந்து
தென்னங்கீற்று மதிலுக்குள் புகுந்து
ஊரெங்கும் நல் சேதியாய் மலர்ந்து

உறவுகள் வருகைதர
கால் நகங்கள் மண்ணைத்தொட
அமைதியாய் அமர்ந்திருந்தாள்
பலர் உரைகளில் புகுந்திருந்தாள்

பள்ளி வாசம் பறிக்கப்பட்டு
கனவு வாசல் எரிக்கப்பட்டு
ஈன்றவரின் சொல்லுக்குள் கிளியாக அடைபட்டு
ஏக்கங்கள் தொற்றிக்கொள்ள நிகழ்வதையும் மறந்திருந்தாள்

தீ தீண்டாப் பானைக்குள்
தண்ணீரை ஊற்றிவைத்து
சிலையாக கல்லுக்கு
திருவிழா நடத்திவைத்து

விவரம் புரியா வயதினில்
புதிய உறவுடன் சேர்ந்து
புதிர்களின் வாயிலை காணும்போது
குழந்தைக்கு தாயாகியிருந்தாள்

கணவனுக்கும் பிள்ளைக்கும்
இடையில் புகுந்து
கடந்த வாழ்வினை
நினைவில் நிறுத்த

காதோரம் கொஞ்சம்
முடிகள் நரைத்திருந்தன
இரண்டோடு மூன்றாக
காலொன்றும் முளைத்திருந்தன

நவீனத்தின் உச்சத்தில்
பட்டினங்கள் சிறகடிக்க
பட்டிக்காட்டுப் பெண்ணிற்கும் மட்டும்
வாழ்க்கை சிறகுகள் உதிர்த்து துளிர்க்காதது ஏனோ ..?

எழுதியவர் : உதயா (23-Sep-15, 5:32 pm)
பார்வை : 119

மேலே