பால்யத்தோடு தொலைந்த இரவு-ரகு
பனை ஓலை வேய்ந்த
குடிசையின் வெக்கையும்
தாங்கவியலாமல்
தாத்தாவோடு
வாசலில் பாய்போடும்
பால்யம் ........
சிறகின்றி
வானில் நகரும்
நிலவின் அழகில்
சுக யுகம் காட்டும்
ஒளிர் இரவின்
மலாந்த படுக்கை
கீரிக்குப் பயந்து
தூண் மரத்தில்
கூடடைந்தக் கோழிகளின்
சிற்சிறு
சல்லாபங்கள்
நிசப்தத்தில் இறங்கிக்
காற்றில் தவழும்
உடற்சூட்டின் சுகத்தில்
வேட்டை மறந்து
என் போர்வைக்குள்
பதுங்கும்
வளர்ப்புப் பூனைக் குட்டி
தாத்தாவின்
மெல்லிய குறட்டையும்
தூரத்தில் ஒலிக்கும்
நாய்களின் ஓலமும்
பயம் உகுத்து
செவி கடத்தும்
இரவின் அழகும்
அமானுஷயமும்
ஓர் மர்மப் புத்தகமாய்
விரிந்திருக்க
ஒரேழுத்தும் நழுவாமல்
படித்துச் சிலிர்த்த காலம்
நினைவுப் பரணில்
இப்போதும்
நள்ளிரவு விழிப்புதட்டி
தடதடத்துக் கடக்கும்
அருகாமை
ரயில் பாதையின்
ரயிலோசையெனக்
கடந்துவிட்ட காலத்தில்
தாத்தாவையும் குடிசையையும்
தொலைத்துவிட்டு,
வாசலில்
நிலவு போடும்
ஒளிர் கோல இரவிழந்து
நான்கு சுவற்றுக்குள்
பதுங்கிக் கிடக்கிறது
பால்யத்திற்குப்
பிந்தைய பருவம்.......!