உண்டிங்கு தாய்மை உனக்கே ---- கலிவிருத்தம்
மடைதிறந்த வெள்ளம்போல் மனமெங்கும் துன்பங்கள்
இடைவிடாது உந்தன்மனம் இறைமையிடம் செல்கிறதே .
உடைபடவும் வேண்டாமே உண்டிங்கு தாய்மையுமே.
விடையாகச் சொல்லுகின்றேன் விஞ்ஞானம் பதில்சொல்லும் . ( தரவு கொச்சகக் கலிப்பா )
தடையேதும் சொல்லிடவும் தவறாக மதிப்பதற்கும்
கடைநிலையில் உள்ளவர்கள் கபடமுடன் பேசிடுவார் .
படைகொண்டு முறியடிப்போம் ; பட்டறிவில் பதிலுரைப்போம் .
அடையாளம் மழலைகளே ! ஆண்டவனும் அருள்செய்வான் . ( தரவு கொச்சகக் கலிப்பா )
மருத்துவத்தின் மகிமைகளை மருத்துவரே எடுத்துரைப்பார் .
வருத்தபடத் தேவையில்லை வகையான மருத்துவத்தால்
விருப்பம்போல் மழலைகளை விரைந்துநீயும் பெற்றிடுவாய் .
திருத்தங்கள் செய்திடுவார் திறமையான வழியுண்டு . ( தரவு கொச்சகக் கலிப்பா )
கருகொள்வாய் காரிகையே கவலையில்லை இனியுனக்கே .
திருப்பங்கள் உனைச்சேரும் தீர்ந்திடுமே துயரங்கள் .
சுருக்கங்கள் உன்னழகைச் சுவைக்காமல் செய்துவிடும் .
வருத்தங்கள் நீவிடுப்பாய் வளர்ந்திடுமே மழலைகளே ! (தரவு கொச்சகக் கலிப்பா )
இது எனது மாணவிக்காக நான் எழுதிய கவிதை . சுமார் பத்து வருடங்களாக குழந்தைச் செல்வம் இன்றி துயரம் அடைந்து உற்றார் உறவினர் மற்றும் பலரும் மலடி என்ற பட்டம் அளித்து நேரடியாகவே சொல்லுன்னா துன்பத்தை அடைந்தவளை நான் மருத்துவரிடம் சென்று காட்டி இன்று சோதனைக் குழாய் குழந்தை பெற்று பெருமகிழ்ச்சியுடன் வாழ்கின்றாள் . அம்மாணவியை எண்ணி எழுதியக் கவிதைதான் இது உங்கள் அனைவரின் பார்வைக்கும் வைக்கின்றேன் . மனம் இருந்தால் மார்க்கம் உண்டு . விஞ்ஞானம் முழுமையாக வளர்ந்திருக்கும் இந்நாளில் பெண்களின் கண்களுக்கு கண்ணீர் வேண்டாம் . உண்டிங்கு தாய்மை உனக்கே . கவலை சிறிதும் வேண்டாம் . இக்கவிதை அனைத்து அன்னையருக்கும் சமர்ப்பணம் .