தனிமை இரவு

இரவின் மூன்றாம் சாமத்தில்
கனவுகளை திறந்து கொண்டிருந்தேன்
நீண்டு கதறும் ஒரு நாயின் ஊளை
தரதரவென இரக்கமில்லாமல்
எனை கைப்பற்றி இழுத்துவந்து
நிஜ உலகின் விளிம்பில்
தள்ளிவிட்டு நீள்கிறது
உற்று கவனித்தேன்; அதோடு
இணைந்துகொண்டது இறந்துபோன
கவிதைகளின் புலால் நாற்றமும்
தேடி அலைகிறேன் அதன் திசையை
அதோ அங்கே மாண்டு போயிருக்கின்றன
இரண்டு மூன்று கவிதைகள்
அவை மிகப் பெரிய ரோஜா இதழ்களை
உன்னோடு உருவகப்படுத்தி எழுதியவை
போல தெரிகிறது .....
ஆம் !
அவை நீ கண்டுகொள்ளாத கவிதைகள்தான்
செத்த கவிதைகளை சுற்றிலும்
என்னை மொய்த்தபடி ஒரு
கவிதை கூட்டம் என்னிடம்
முறையிடுகின்றன....
தங்களின் எதிர்காலம் பற்றி கேள்வி கேட்கின்றன
பதில் ஏதும் அற்றவளாய்
அமலியிலிருந்து என்னை விடுவித்துக் கொண்டு
மௌனமாய் வெளியேறிவிட்டேன்
இன்னும் தூரத்தில்
கேட்டுக்கொண்டேயும்
நாறிக்கொண்டேயும் இருக்கிறது
அகோரங்கள் நிறைந்த
இந்த தனிமை இரவுகளை
எந்த வெளியில் எறிவேன்?
கேட்கிறதா உனக்கு?