நிழல் நினைவுகள் - கலையாத கல்லூரிக் கனவுகள்

வாழ்க்கை -
கடந்து சென்ற நிகழ்வுகள்
காலத்தால் நம் மனதில் எழுதிய
சுவடுகளின் தொகுப்பு!

வாழ்வின் வடிவழகை
வடிகட்டிப் பார்க்க விழைவது
என் இயல்பு!

முழு வாழ்வையும் புரட்டிப் பார்க்க இயலாத இத்தருணத்தில்
நம் மூன்றாண்டு வாழ்வையாவது
புரட்டிப் பார்க்க முயல்கிறேன்!

இனிமை குறையாத இளமைக்கு
இனிமை கூட்டுவது
கனவுப்பூக்கள் பூக்கும்
கல்லூரி வாழ்வே!

இப்பூக்களின் பரிணாமத்தை
சற்றே உற்று நோக்குங்கள்!
இவை பள்ளியில் அரும்பி,
இளங்கலையில் துள்ளி,
முதுகலையில் முதிரக்கூடியவை!

கனவுகள் துள்ளிய
நம் இளங்கலை வாழ்வை
சற்றே புரட்டுவோம்...
வாருங்கள்...!

பள்ளி வாசனையோடும்
பாடற்பிரிவு யோசனையோடும்
பக்கத்துக் கல்லூரிக்குள்
நம் பயணம் தொடங்கியது!

பயணத்தில் ரசித்த நிகழ்வுகளை
பட்டியல்போட விழைகிறது
என் மனம்!ஆம்!..

புதுச்சூழல் பதற்றம் ,
புதுமுக அணிவகுப்பு,
புதுப்பிக்காத புத்திமதி,...

எளிதில் கூடிய நட்பு,
எளிதில் கூடாத காதல்,
பேசிய கண்கள்,
பேச மறுத்த இதயங்கள்,…

மதிப்பெண்ணுக்காக மனப்பாடம்,
மனதில் தங்காத கல்வி,
புரட்டாத புத்தகப் பக்கங்கள்,
புத்தகப் புழுவாய் சில நொடிகள்,…

செய்யத் துடித்த செய்முறைப் பயிற்சிகள்,
தள்ளிப்போட்ட தேர்வுகள்,
முகங்களை மறவாத நகல் எந்திரங்கள்,
அடக்கி ஆண்ட அக மதிப்பெண்கள்,…


பெற்றோரையும் தன்னையும் ஏமாற்றி
நண்பர்கள் வீட்டில்
கண்ட புதுப்படிப்பு,
ஆரவாரப் பருவத் தேர்வுகள்,
இறுதி நொடியில்
மனதில் பதியாத
மனப்பாட வரிகள்,…

விரைவாய் பகிர்ந்து கொண்ட விடைத்தாட்கள்,
தேர்வறையில் துணைநின்ற துண்டுக் காகிதங்கள்,
தேட விரும்பாத
தேர்வு முடிவுகள்,…

சிலுவையில் திருநீறால் பிறை வரைந்த நண்பர்கள்,!!!
தவறிய நட்பில் தவறான பழக்கங்கள்,
தவறுக்குத் தவறாத தவறான நட்புகள்,
அப்பாவி(ன்) பணத்தில் ஆடம்பர செலவுகள்,…

வகுப்பறை வாய்ஜாலங்கள்,
வாத்தியாரோடு வாக்குவாதங்கள்,
சிறுசிறு ஊடல்கள்,
சிறப்பான கூடல்கள்,…

சுற்றித் திகட்டாத சுற்றுலா,
கலைகட்டிய கலை நிகழ்ச்சிகள்,
கலங்கி நின்ற கவலைகள்,
கண்குளிரக் கண்காட்சிகள்,…

சிலதடவை சிற்றுண்டி உணவு,
பலதடவை பட்டினிச் சுகம்!,
உரிமையில் பறிபோன உணவுகள்,
கலந்துண்டு மகிழ்ந்த கலவைச் சாப்பாடு ,…

அடக்கி வைத்தபோதும் அலறல் போட்டுக்
காட்டிக் கொடுத்த அலைபேசிகள்,
தப்பியோட வைத்த திரைப்படங்கள்,
தப்ப முயன்ற தண்டணைகள்,…

விடுப்பு விண்ணப்பத்தில் தந்தையான தருணங்கள்,
கடைசி நாளில் கையொப்பம் கேட்ட மரங்கள்,
படியில் வாழ்ந்த பேருந்துப் பயணங்கள்,!!!...
தாமத வருகைக்கு பழிசுமத்தப்பட்ட பேருந்துகள்,…

கனவிலும் நினையாத நண்பர் வீட்டு மரண ஓலங்கள்,
முதல்நாளே முந்திச் சென்ற நண்பர் வீட்டு விழாக்கள்,
கூடியிருந்த தருணங்களில் பற்றாக்குறையான புகைப்படச்சுருள்கள்,…

மறக்க முடியாத மனத்தடுமாற்றங்கள்,
மறைக்க முடியாத மனக்களவுகள்,
கடிதங்களின் மத்தியில் காதலர் தினங்கள்,!!!...

விளைவறியாது விடுத்த விண்ணப்பங்கள்,
விளைவறிந்தபின் விளக்கிய தருணங்கள்,
கண்ணீரில் நனைத்த காதல் மறுப்புரைகள்,
கடிதங்களில் மடிந்த கண்ணீர் துளிகள்,!!!...

கசப்பில் சுரந்த இனிப்பாய் அமைந்த
ஒருதலைக் காதல்கள்,!!!...
விலக்கினாலும் விலகாத விருப்பங்கள்,
விரும்பினாலும் விலகிநிற்கும் விலகல்கள்,…

பிரியம் கொள்ளாத பிரிவு,
பிரிவைக் கொல்லும் பிரியம்,
காண விரும்பாத கடைசி நாள்!!!...
என நம் நினைவில் வாழத்துடிக்கும்
நிகழ்வுகளின் எண்ணிக்கை என்றும் முடிவிலிகளே!!!...

நாம் இளங்கலையில் கல்வி பயின்றதை விட,
கொண்டாட்டங்களில் குடை பிடித்து,
ஆனந்த மழையில் நனைந்த தருணங்கள்தான் அதிகம்!

ஈரேழு உலகினை ஈடாய்க் கொடுத்து அழைத்தாலும்
திரும்பிப் பார்க்காதவை அத்தருணங்கள்!ஆம்!..

காலம் நம்மை அதிவிரைவு ரயிலில் அழைத்துச் சென்று
சொர்க்கம் காட்டி சுமை குறைத்தது!


சொர்க்க வாழ்வில் சொக்கிப்போன நாம்
இன்று பூமி வர மறுப்பதை
வேடிக்கை என்பதா? அல்லது
வேதனை என்பதா?- விளங்கவில்லை!!!...

கண்முன்னே கடந்து சென்ற நிகழ்வுகளை
நான் திரும்பிப் பார்த்த தருணம்,…
மனதை வருடிநின்ற வரிகளை,
வாக்கியத்தால் வரவேற்றது என் பாக்கியம்!ஆம்!...

அவற்றைக் கவித்துவம் கொடுத்து
காகிதத்தில் அமர்த்தினேன்...!

இமைப்பொழுதில் மூன்றாண்டுகளை விழுங்கிய நமக்கு,
ஆயுள் முழுக்க அசைபோட
நினைவுகளாவது மிஞ்சட்டுமே என்று...!

இருப்பினும்,…
நீங்கள் நிகழ்கால நிகழ்வுகளை விடுத்து,
இறந்தகால நினைவுகளோடு மட்டும் வாழ்ந்தால்,
உங்கள் எதிர்காலம் இறந்துவிடும்!!!

உங்கள் நிகழ்கால வாழ்வில் உள்ள
கேள்விக்குறிகளை நேராக்க
நீங்கள் முயன்றால்,
உங்கள் எதிர்கால வாழ்வு பல
ஆச்சரியக்குறிகளைக் கொண்டிருக்கும் என்பது திண்ணம்!!!.

நம் வசந்தகாலம் சற்று
வற்றத் தொடங்கிவிட்டது!ஆம்!!!...
வருமானத் தேடல், குடும்பம்,
பொறுப்பு, கடமை என
சுமைகள் பல தம்மைச் சுமக்க
நமக்கு அழைப்பு விடுக்கத்
தொடங்கிவிட்டன!

வெள்ளை உள்ளத்தின் வெளிப்பாடாய்
நரை தோன்றும் காலத்தில் கூட,
பொக்கை வாயில் புன்னகை தேடுவது என்பது
இயந்திர வாழ்வில் இயலாத ஒன்று!

மனக்குமுறல்களின் மத்தியில்
நம் இதழ்களில் புன்னகை மலர்வது என்பது
இளமை இனிமைகளைப் புரட்டும்போது
மட்டும்தான்!!!

வந்த பாதையை நீங்கள்
நிந்தனை செய்ய முயலும் போது,
என் வரிகள் உங்கள் முன்வந்து
நிற்பது திண்ணம்!ஆம்!

என் கருத்துக்கசிவுகளை நீங்கள்
வாசிப்பதைக் காட்டிலும்
சுவாசிக்க முயலுங்கள்!
இன்னல்களின் மத்தியில்
நீங்கள் இளைப்பாற
இந்த நிழல்நினைவுகள்
நிச்சயம் உதவும்!

புகைப்படங்களோடு உறவுகொள்ள
விழையும் இதயங்களோடு,…
புதைந்த படங்களாய் இந்நினைவுகள்
நிழல்போல தொடர்ந்துவந்து உறவுகொள்ளும்!
எனவேதான் நிழல்களை நிஜமாக்கும்
இந்த "நிழல் நினைவுகள்" ஓர் நினைவுப் பரிசு !!!...

உங்கள் மத்தியில் ஓர் அன்பு வேண்டுகோள் !
போராட்டத் தீவிரத்தில்,
புன்னகை சிந்த புதுவழிதேடும்
இந்த புதிர் வாழ்வில்,
இறைவன் அருளால்
இன்னொரு சந்திப்பு நேருமானால், ...

மௌனத்தின் ஆழத்தில் புதைந்த வார்த்தைகளுடன்,
இதயங்களில் கண்ணீர்ப்பூக்கள் மலர்ந்தாலும்,…
அவை உங்கள் இதழ்களில் புன்னகைப்பூக்களாய் உதிரட்டும்!!!

நீங்கள் சிந்தும் இருதுளிக்கண்ணீர்,…
பிரிவின் மடியில் உறவுகொள்ளத் துடிக்கும்
இதயங்களுக்கு ஆறுதல் கூட்டட்டும்...!

இன்னொரு சந்திப்பை
இறைவனிடம் யாசிக்கிறேன் –
இருதுளிக் கண்ணீருக்காக!!!

- பா.வெ.

எழுதியவர் : பா.வெங்கடேசன் (7-Oct-15, 6:00 pm)
பார்வை : 1100

மேலே