நோ் எதிர் மனோபாவம்

சிறு குழந்தை
அயர்ச்சியில் சுருண்டு
கிடப்பது போல் படுத்திருக்கிறது
அசல் துப்பாக்கியொன்று

தலை நிற்காத
பிஞ்சுக் குழந்தையை
வாரிக் கொள்கையில்
தவறிவிடுமோ என
வருமே ஒரு பயம்
அப்படியொரு பயம்
துப்பாக்கி எடுக்கையிலும் வருகிறது

நம்மீதான குழந்தையின்
பார்வையை விரும்பி ஏற்கும் மனம்
துப்பாக்கி முனைப்பார்வையை
வேறோா் பக்கம் திருப்பி விடுவதிலேயே குறியாயிருக்கிறது

எதிா்வரும்.தீபாவளிக்கு
துப்பாக்கிதான் கேட்பான் மகன்
அவன் அயர்ந்த நேரங்களில்
அப் பொம்மைத் துப்பாக்கியை
விரும்பியவாறெல்லாம்
எடுத்துப் பார்த்துக்கொள்ள வேண்டும்....!

எழுதியவர் : புதிய கோடங்கி (9-Oct-15, 7:33 am)
பார்வை : 138

மேலே