நீ இல்லாமல் நானா நகைச்சுவை கவிதை --- 4

.................................................................................................................................................................................................
தூரத்து எழுத்து தெரியவில்லை,
தோள் கொடுக்க நீ வந்தாய்.
முகத்தின் முக்கிய உறுப்பைப் போல்
மூக்கின் நுனியில் அமர்ந்து கொண்டாய்.

வருவது ஆணா பெண்தானா
நீதான் காட்டிக் கொடுக்கின்றாய்
எழுவது மாடா மானிடனா
இதையும் நீதான் சொல்கின்றாய்

லேசர் சர்ஜரி செய்த பின்னும்
லேசாய் உன்னை நினைக்க வில்லை.
பார்வை முழுதும் கிடைத்தவுடன்
பழங்கதை நானும் மறக்க வில்லை.

அயலார் கண்டால் விழி சுருக்கி
அடடே, அவனா நீ என்றார்.
அழகாய்த் திகழ நீயின்றி
அடையாளம் தான் தொலைத்து விட்டேன்.

முகத்தை கழுவிடும் போதெல்லாம்
பழக்க தோசம் காரணமாய்
இல்லாத உன்னை எடுக்கின்றேன்.
கற்பனை யாக அணிகின்றேன்.

செய்தித்தாள் எதிரில் போட்டிருந்தால்
சீந்தாமல் எட்டி நடக்கின்றேன்
கண்ணாடி இல்லாமல் படிப்பதுவா?
கண்களை தாஜா செய்கின்றேன்.

கண்ணாடி கழற்றி கையில் வைத்தால்
காரியம் முடிந்தது என்று பொருள்.
பதமாய் சுழற்றி பக்கம் வைத்தால்
பலமாய் யோசனை என்று பொருள்.

மருத்துவருக்குக் கண்ணாடி
மருந்தை விடவும் தேவையன்றோ?
கழற்றித் துடைத்து தலை கவிழ்ந்தால்
நோயாளி “கதி” தெரியுமன்றோ?

குறிப்பால் எப்படி உணர்த்திடுவேன்
குழம்பி குழம்பி போகின்றேன்.
ஒருக்கால் மூப்பின் காலம் வரும்
உறங்கு அதுவரை பத்திரமாய்!

எழுதியவர் : அருணை ஜெயசீலி (11-Oct-15, 11:31 am)
பார்வை : 483

மேலே