ஏன் இன்னும் எரிந்துகொண்டிருக்கிறோம்

நாங்கள் இன்னும்
ஏன் எரிந்து கொண்டிருக்கிறோம்
என்ன பாவம் செய்தோமென்று
எங்களுக்குப் புரியவில்லை
வாசலில் சுடுகலனேந்திய
அன்னியப் படை
அடக்குமுறை அரசு சொல்கிறது
பாதுகாப்பென்று..
காணாமற் போதல்கள்
கைதுகள்
பாலியல் வன்புணர்வுகள்
அடையாளமற்ற கொலைகள்
தொடர்கிறது..
மக்களைப்
பேசாத ஊமைகளாக்க
முகாம்கள் முளைக்கின்றன
புதிய அணிகள்
புதிய திசைகாட்டுவதாக
உறுமுகின்றன.
விசையிருந்தால்
பறக்க முயற்சிப்பதாய்
சிறகசைக்கின்றன!

நாமே ஆசீர்வதிக்கப்படவர்கள்
நாமே அனுபவமுள்ளவர்கள்
நாமே ஆற்றலாளர்கள்
முடிநரைத்துக் கூன்விழுந்தாலும்
முடியும் வரை தொடர்வோம்
தீர்வுதேடித் தருவோம்…..!
சிங்களமும் தொடர்கிறது
புதிது புதியாய் நடுகிறது
சித்தார்த்தன் சிலைகளை..
வீதி முலையில் இருந்து
எங்களுக்கு அவல் தரும்
வைரவரைக் காணவில்லை
மஞ்சள் நிறச்சிலையொன்று
இருக்கிறதே அம்மா!

அப்பாவியாய் கேட்கிறது
ஆறுவயதுக் குழந்தை
வாசலில் நிற்கும்
படையினனின் முறைப்பு
பதில்சொல்ல முடியாது
தடுமாறும் தாய்
தாய் தடுமாறுவதென்னவோ
அடுத்தலைமுறையைப்
பாதுகாத்து பரவச்செய்ய….
குழந்தையின் சிந்தனைகூட
ஏனிவர்களுக்கு வரவில்லை
ஓ! ஒருவேளை
இழப்பின் வலி புரியாததாலா
பழங்கள் தடுமாறலாமோ
பல பலகணிகள் கண்டபின்பும்
பழையை குடையைத்
தூசி தடுவதேன்
ஓட்டைக்குடையால்
தலையைக் கூடப்
பாதுகாக்க முடியாதே!

எப்படியாம் வீட்டைப்…
பிரியாத தேசியமும்
மறவாத காதலுமாய்
சிங்களத்தை திருப்திசெய்து
தமிழினத்தை அழிப்பதற்கு
தாமும் துணைபோகும்
அரசியலை அறியாத(!)
வீணர்களாய் இருப்பதனால்
வீணாகிப்போவதென்னவோ
விதையாகிப்போனோரும்
உரமாகிப்போனோரும்
உயிர்தந்து உரமேற்றிய
தமிழ்த் தேசியம்தான்!

எமது முன்னோர் வாழ்ந்த
எங்களுக்கேயான
எமது நிலத்தைக்
கேட்பதா … மீட்பதா
ஆக்கிரமிப்பாளனே
முடிவுசெய்ய வேண்டியவனாய்..
சூரியன் ஏற்றிவைத்த சுடர்தான்
தேசத்துக்கு ஒளியேற்றித்
தமிழினத்தை நிமிரவைக்க
ஆனால் அதுவே
தமிழினத்தை எரிக்குமானால்
சுடரை அணைத்துவிட்டு
இருட்டிலே இருந்தாற்கூட
வெளிச்சம் தேடும்
புது வேகம் பிறக்கும்!


குமுதபாஸ்கரன் – யேர்மனி

எழுதியவர் : குமுதபாஸ்கரன் – யேர்மனி (21-Oct-15, 4:53 pm)
சேர்த்தது : உலகநாதன்
பார்வை : 41

மேலே