சொல்ல நினைத்ததைச் சொல்லிவிடு
கற்றவை, கேட்டவை, படித்தவை பிடிக்கையில்
பற்பல சமயம்நாம் பார்த்தவை பிடிக்கையில் ,
அற்புதம்,அற்புதம் எனமனம் வியக்கையில் ,
பாராட் டிடவே உன்மனம் நினைக்கையில்
மெல்லச் சொல்வோம் என்றில் லாமல்
சொல்ல நினைத்ததைச் சொல்லி விடு
நண்பர் , உறவினர் , உற்றார் செய்த
நன்செயல் பிடித்தால் , மனமதில் நெகிழ்ந்தால்
தன்முனைப் போடு ^^ தயக்கமும் சேர்ந்து
நன்றிதென் றுரைப்பதைத் தடுத் திடாமல்
மெல்லச் சொல்வோம் என்றில் லாமல்
சொல்ல நினைத்ததைச் சொல்லி விடு
அகத்தில் நுழைந்துநல் லனுபவம் அளித்து
மகிழ்ச்சியைத் தந்து மனம்தொட்ட எதையும்
சுகித்திட்ட சூடு தணிந்திடும் முன்னே
பகிர்ந்திட வேண்டும் பாராட் டுகளை
மெல்லச் சொல்வோம் என்றில் லாமல்
சொல்ல நினைத்ததைச் சொல்லி விடு
உதவியை நாடும் உடல் நலம் நலிந்தோர்
முதியோர் , வறியோர், கைவிடப் பட்ட
கதியில் மாந்தர் நிலையினை நோக்கையில்
'உதவுக' என்று உள்மனம் சொன்னால்
உடுக்கை இழந்தவன் கைபோல் உடனே
கொடுக்க நினைத்ததைக் கொடுத்து விடு.
நேற்றைய பொழுது நன்றாய்க் கழிந்தது
காற்றை இழுத்து சுவாசம் செய்தாய்
சோற்றை உண்டு சுகமாய் இருந்தாய்
கூற்றுவன் இன்றே வரலாம் அதனால்
பையச் செய்வோம் என்றில் லாமல்
செய்ய நினைத்ததைச் செய்து விடு
அன்புடன்
ரமேஷ் (கனித்தோட்டம்)
வாழ்க்கை
^^ தன்முனைப் போடு WITH EGO