கறவை மறந்த காறாம் பசுக்கள்

கறவை நின்ற பின்பு
மாட்டின் கயிறுகள்
அறுக்கப்பட்டிருக்கலாம்!

நகர வீதிதொறும்
இப்போது பட்டினப் பிரவேசம்.

பெட்டிக் கடையில் தொங்கும்
காகிதங்கள் மீது கண்.

தெருக்களில்
எதிர்கட்சிகளோடு
கூட்டுச் சொர்ந்து
சுவரொட்டிகளை கிழிக்கிறது.

வீடுகளில்
கழனி நீருக்காக
கால் கடுக்கத் தவம்.

உரிய ஊட்டமும் இல்லை
மாட்டுக்காரன
உள்ளபடியே
'தண்ணி' காட்டுகிறான்.

ஓட்டிச் சுருக்கிய மடிகள்
எலும்பும் தோலுமான உருவம்.

இந்த அலைக்கழிப்பு நீடிக்கும்,
அடுத்து, மாடு
சினை பிடிக்கும் வரை.

~கவுதமன்~

எழுதியவர் : கவுதமன் (6-Nov-15, 8:29 am)
பார்வை : 148

மேலே